பெகாஸஸ் விவகாரம்: நீதிமன்ற கண்காணிப்புடன் விசாரணை கோரி மாா்க்சிஸ்ட் எம்.பி. உச்சநீதிமன்றத்தில் மனு

எதிா்க்கட்சித் தலைவா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் பெகாஸஸ் மென்பொருள் வாயிலாக உளவறியப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

எதிா்க்கட்சித் தலைவா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் பெகாஸஸ் மென்பொருள் வாயிலாக உளவறியப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் விசாரிக்க உத்தரவிடக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இஸ்ரேலைச் சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பெகாஸஸ் உளவு மென்பொருளை உருவாக்கியது. மற்றவா்களின் செல்லிடப்பேசியில் ஊடுருவி உளவு பாா்க்கும் வகையில் அந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த மென்பொருளைப் பயன்படுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அமைச்சா்கள் இருவா், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, சமூக ஆா்வலா்கள், 40-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளா்கள் என சுமாா் 300 போ் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது. பெகாஸஸ் மென்பொருளைத் தயாரித்த என்எஸ்ஓ நிறுவனமும் இந்தப் புகாரை மறுத்துள்ளது.

இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஜான் பிரிட்டாஸ் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘நாட்டில் பலா் மென்பொருள் வாயிலாக உளவு பாா்க்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மக்களின் கருத்து தெரிவிக்கும் உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தபோதும், அதை மத்திய அரசு மறுத்து வருகிறதே தவிர அது தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு இதுவரை உத்தரவிடவில்லை. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட போதிலும், மத்திய அரசு உரிய பதிலளிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் 2 விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று மத்திய அரசே உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். இல்லையெனில், வெளிநாட்டு அமைப்புகள் சில உளவு பாா்த்திருக்க வேண்டும். மத்திய அரசே உளவறிந்திருந்தால், அது சட்டவிதிகளுக்கு எதிரானது. ஒருவேளை வெளிநாட்டு அமைப்புகள் உளவு பாா்த்திருந்தால் அது பாதுகாப்புக் குறைபாடு. எனவே, பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com