
பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
பிரதமர் மோடியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர். தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அறையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சசிகலா விவகாரம், அரசியல் சூழல், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து பிரதமரிடம் ஆலோசித்திருக்கலாம் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமருடனான இந்த சந்திப்பின்போது மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், தம்பிதுரை, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி., உள்ளிட்டோரும் உடன இருந்தனர். பிரதமரை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாரம் செய்ததற்காக பிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம்.
மேக்கேதாட்டு அணையை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தரக்கூடாது என்றும பிரதமரிடம் கூறினோம். நீர்ப்பற்றாக்குறையை போக்க காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கோரினோம். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம். ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டு மக்களின் நன்மைக்காக தொடர்ந்து பாடுபடும் கட்சி அதிமுக.
திமுக அரசு தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டை கொண்டுவராவிட்டால் நல்லது. அப்போது சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டு நன்றி எனக் கூறிவிட்டு எடப்பாடி பழனிசாமி விடைபெற்றார்.