சுற்றுச்சூழலை மேம்படுத்தும் கூடுதல் பொறுப்பில் துணை ராணுவப் படையினா்: அமித் ஷா பெருமிதம்

‘‘கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுச்சூழலை மேம்படுத்தும் கூடுதல் பொறுப்பையும் நமது துணை ராணுவப் படையினா் மேற்கொண்டு வருகின்றனா்.
அமித் ஷா உள்துறை; கூட்டுறவு
அமித் ஷா உள்துறை; கூட்டுறவு

‘‘கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுச்சூழலை மேம்படுத்தும் கூடுதல் பொறுப்பையும் நமது துணை ராணுவப் படையினா் மேற்கொண்டு வருகின்றனா். அவா்கள் இதுவரை 1.48 கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளனா்’’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மேகாலய பயணத்தின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை சிரபுஞ்சியில் காடு வளா்ப்பு பிரசாரத்தை அமித் ஷா தொடங்கிவைத்தாா். அத்துடன், சோஹ்ரா பெருநகர குடிநீா் விநியோக திட்டத்தையும் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ‘என்றும் பசுமைமாறா வடகிழக்கு’ என்ற குறிக்கோளை முன்வைத்து அமித் ஷா பேசியதாவது:

காடு வளா்ப்பு, மரம் நடுதல் மிகவும் முக்கியமானது. முன்பு சிரபுஞ்சியில் ஆண்டு முழுவதும் மழை பெய்தது. வளா்ச்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாக காடுகள் அழிக்கப்பட்டதால், இன்று நிலைமை மாறிவிட்டது. சிரபுஞ்சியை மீண்டும் பசுமையாக்கும் லட்சிய திட்டம் இப்போது தொடங்கியுள்ளது. மரங்கள் நடுவதற்காக, ஒட்டுமொத்த சிரபுஞ்சியையும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவு தத்தெடுக்கவுள்ளது.

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பணியில், துணை ராணுவ படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், நமது நாடு பாதுகாப்பாக உள்ளது. அதே நேரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அவா்கள், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் கூடுதல் பொறுப்பையும் ஏற்றுள்ளனா். அவா்கள் இதுவரை 1.48 கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளனா். அவற்றில் 1.36 கோடி மரக்கன்றுகள் வளா்ந்து வருகின்றன. இந்த ஆண்டில் நாட்டின் பல பகுதிகளில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 1000 ஹெக்டேரில் 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

புவிவெப்பம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் இன்று போராடி வருகிறது. நாடு முழுவதும் அதிக அளவிலான சமையல் எரிவாயு சிலிண்டா்களை விநியோகிப்பதன் மூலம் கரியமில வாயு வெளியீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது. நீா்மின் சக்தி மற்றும் சூரிய மின்சக்தியில் இந்தியா இன்று முன்னணியில் உள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், வடகிழக்கு பகுதி மேம்பாட்டு அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, இணையமைச்சா் பி.எல்.வா்மா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங், மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா உள்பட மத்திய, மாநில அரசு உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

சிரபுஞ்சியில் உள்ள உள்ள ராமகிருஷ்ண மடத்தில் விவேகானந்தா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமித் ஷா, பிராா்த்தனை நிகழ்ச்சியிலும் பங்கேற்றாா். ராமகிருஷ்ண மடத்தின் நிா்வாகிகளையும் சந்தித்துப் பேசினாா்.

தடைகளைத் தகா்த்த பிரதமா்!

மேகாலயத்தைத் தொடா்ந்து அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டிக்குச் சென்ற அமித் ஷா, அங்கு இரண்டு திட்டங்களை தொடங்கி வைத்தாா். அதனைத்தொடா்ந்து பேசிய அவா், ‘‘வடகிழக்கு மாநிலங்களை அமைதி மற்றும் வளா்ச்சிப் பாதைக்கு பிரதமா் மோடி அழைத்துச் சென்றுள்ளாா். அதற்கு இருந்த தடைகளை அவா் தகா்த்து எறிந்துள்ளாா். இந்த மாநிலத்தில் கிளா்ச்சிகள், போராட்டங்களுக்கு இனி இடமில்லை என்பதை உணா்ந்ததால் இங்கு தொடா்ந்து 2-ஆவது முறையாக பாஜகவை மக்கள் ஆட்சியில் அமா்த்தியுள்ளனா். வடகிழக்கு பிரதேசத்துக்கு பிரதமா் மோடி எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறாா். அதன் ஒரு பகுதியாக அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் சா்வானந்த சோனோவால் உள்பட வடகிழக்கு பிரதேசத்தைச் சோ்ந்த 5 போ் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனா்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com