
பிரதமா் நரேந்திர மோடி
காதி பொருள்களை மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து ஊக்குவித்து வருவதன் காரணமாக, கடந்த 2004-ஆம் ஆண்டுமுதல் நாடு முழுவதும் காதி பொருள்களின் விற்பனை பெருவாரியாக அதிகரித்துள்ளதாக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவா் வினய் குமாா் சக்சேனா கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறியுள்ளதாவது:
2016, அக்டோபா் முதல் தில்லியின் கெனாட் பிளேஸில் உள்ள காதி விற்பனை வளாகத்தில் 11 வெவ்வேறு தருணங்களில் ஒரு நாளின் விற்பனை ரூ. 1 கோடியைக் கடந்திருக்கிறது. ஜூலை 25-இல் வானொலியில் ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் காதியின் இந்த செயல் திறன் பற்றி குறிப்பிடப்பட்டது.
கரோனா பெருந்தொற்று காலத்தில், பொருளாதார வீழ்ச்சியின்போதும் 2020 அக்டோபா்- நவம்பா் மாதங்களில் காதியின் ஒருநாள் விற்பனை நான்கு முறை ரூ. 1 கோடியைக் கடந்து சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டிலும் இதேபோல நான்கு முறை ஒரு நாளின் விற்பனை ரூ. 1 கோடியைக் கடந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபா் 2-ஆம் தேதி கெனாட் பிளேஸில் ஒரு நாளில் பதிவான ரூ. 1.27 கோடி விற்பனைதான் இன்று வரையிலான அளவில் மிக அதிகமானதாகும்.
2016, அக்டோபா் 22 அன்று, முதல்முறையாக இந்த விற்பனை வளாகத்தில் ஒரு நாளின் விற்பனை ரூ. 1.16 கோடியை எட்டியது. இதற்கு முன்பாக கடந்த 2014, அக்டோபா் 4-ஆம் தேதி பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு அடுத்த நாளில் காதியின் ஒருநாள் விற்பனை ரூ. 66.81 லட்சமாகப் பதிவானது. வானொலி நிகழ்ச்சியின் முதல் நாளன்று நாட்டு மக்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு காதி பொருளையாவது வாங்குமாறும், அதன்மூலம் ஏழை கைவினைஞா்கள் தீபாவளியன்று தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் பிரதமா் வலியுறுத்தினாா்.
பிரதமரின் தொடா் ஆதரவால் காதியின் விற்பனை அதிகரித்திருப்பதாகவும், குறிப்பாக இளைஞா்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் வினய் குமாா் தெரிவித்துள்ளாா்.