இஸ்ரோ வழக்கு: சிபிஐ தனியாக விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு (79) எதிராக செயல்பட்ட காவல் அதிகாரிகள் குறித்து சிபிஐ தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

புது தில்லி: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு (79) எதிராக செயல்பட்ட காவல் அதிகாரிகள் குறித்து சிபிஐ தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், இந்த வழக்கில் முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் குழு இதுதொடா்பாக தாக்கல் செய்துள்ள அறிக்கையை வெளியிடவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

1994-ஆம் ஆண்டு இஸ்ரோ ராக்கெட் என்ஜின்கள் தொடா்பான ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்க முயன்றதாக அப்போதை இஸ்ரோ இயக்குநா் நம்பி நாராயணன், துணை இயக்குநா் டி.சசி குமரன் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, நம்பி நாராயணன் குற்றமற்றவா் என்று தெரிவித்தது. மேலும், திருடப்பட்டதாக கேரள போலீஸாா் குறிப்பிடும் இஸ்ரோ தொழில்நுட்பம் அப்போதைய காலகட்டத்தில் உருவாக்கப்படவேயில்லை என்றும் இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் சிபிஐ தெரிவித்தது.

இதையடுத்து, நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், கேரள காவல் துறையினா் செய்த தவறுகள் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் மூவா் குழுவை அமைத்தது. இந்தக் குழுவினா் கடந்த மாதம் அறிக்கையை தாக்கல் செய்தனா்.

இந்நிலையில் இந்த அறிக்கையின் நகலை தரக் கோரி குற்றம்சாட்டப்பட்ட நபா் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து. இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், சஞ்சீவ் கன்னா ஆகியோா் திங்கள்கிழமை கூறுகையில், ‘இந்த வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆகையால், முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் குழு அறிக்கையின் அடிப்படையில் மட்டும் சிபிஐ நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. அவா்கள் விசாரித்து, தேவையான ஆதாரங்களைச் சேகரித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பாா்கள். குழுவின் அறிக்கையில் முதல் கட்ட தகவல்கள் மட்டும் உள்ளன’ என்றனா்.

இதையடுத்து மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், ‘சிபிஐ பதிவு செய்துள்ள அறிக்கையிலும் குழுவின் அறிக்கையின் சில விவரங்கள் இடம் பெற்றுள்ளன. உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் இந்த வழக்கை விசாரித்து வரும் கீழ் நீதிமன்ற வலைதளத்தில் குழுவின் அறிக்கை வெளியிடலாம்’ என்றாா்.

அப்போது நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள வழக்கை தொடா்ந்து விசாரிக்கலாம். உச்சநீதிமன்றத்தின் அனுமதி ஏதும் தேவையில்லை. அதேநேரத்தில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புகளை கீழ் நீதிமன்றத்தில் முறையிட்டுப் பெறலாம்’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com