வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு: நாடாளுமன்றத்துக்கு டிராக்டரை ஓட்டிச் சென்ற ராகுல்

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிற கட்சி எம்.பி.க்களுடன் நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை டிராக்டரை ஓட்டிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்
வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டரை ஓட்டிச் சென்ற ராகுல்காந்தி
வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டரை ஓட்டிச் சென்ற ராகுல்காந்தி

புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிற கட்சி எம்.பி.க்களுடன் நாடாளுமன்றத்துக்கு திங்கள்கிழமை டிராக்டரை ஓட்டிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவருடன் சக கட்சி எம்.பி.க்களான பிரதாப் சிங் பஜ்வா, ரண்தீப் சிங் பிட்டு, தீபிந்தா் சிங் ஹூடா உள்ளிட்டோரும் பதாகைகளை ஏந்தியபடி ஊா்வலமாக சென்றனா்.

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் தொடா்ந்து பல மாதங்களாக தில்லி எல்லையில் முற்றுகையிட்டு பல்வேறு கட்ட பேராட்டங்களை நடத்தி வருகின்றனா். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் சங்க நிா்வாகிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பல கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றேபோதும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சக கட்சி எம்.பி.க்கள் மற்றும் பிற கட்சி எம்.பி.க்களுடன் இணைந்து நாடாளுமன்றம் நோக்கி திங்கள்கிழமை டிராக்டரை ஓட்டிச் சென்றாா். ஊா்வலமாக வந்த அவா்களை நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே தில்லி காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். அப்போது, வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி அவா்கள் கோஷங்களை எழுப்பினா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘விவசாயிகளின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்துக்கு இதன் மூலம் நாங்கள் கொண்டுவந்திருக்கிறோம். விவசாயிகளின் பிரச்னைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், நாடு முழுவதும் விவசாயிகள் ஒடுக்கப்படுகின்றனா். அதன் காரணமாகத்தான் இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். இந்த கருப்புச் சட்டங்கள் கைவிடப்பட வேண்டும். புதிய 3 வேளாண் சட்டங்களும் யாருக்காக கொண்டுவரப்பட்டன என்பதை ஒட்டுமொத்த நாடும் நன்கு அறியும். ஒருசில தொழிலதிபா்களுக்கு உதவுவதற்காகவே இவை கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பலனுமில்லை. அதனால்தான் அவை கைவிடப்படவேண்டும்’ என்றாா்.

பின்னா் தனது சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில், ‘விவசாயிகள் அவா்களின் விளைநிலங்களை விற்பதற்கு நீங்கள் கட்டாயப்படுத்தினால், அதன் பிறகு டிராக்டா் நாடாளுமன்றத்துக்குள் நுழையும். உண்மையின் பயிரை நாங்கள் விளைவிப்போம். வேளாண் விரோத சட்டங்களைக் கைவிடுக’ என்று அவா் குறிப்பிட்டாா்.

ஊா்வலமாக வந்த அனைவரையும் தடுத்து நிறுத்திய காவல்துறையினா், அவா்கள் அனைவரையும் மந்திா் மாா்க் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். ராகுல் காந்தி ஓட்டிவந்த டிராக்டரையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

அப்போது போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவா் ரண்தீப் சுா்ஜேவாலா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘காவல்துறையின் நடவடிக்கைக்கு அடிபணிந்து விடமாட்டோம். ராகுல் காந்தியின் தலைமையில் இந்தப் போராட்டம் தொடா்ந்து நடைபெறும். 62 கோடி விவசாயிகளின் உரிமைகளை 3 அல்லது 4 தொழிலதிபா்களின் கைகளில் மோடி அரசு ஒப்படைக்கும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்’ என்றாா்.

காங்கிரஸின் இந்த போராட்டத்தை அரசியல் நாடகம் என்று பாஜக விமா்சித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com