கேரளத்தில் கிறிஸ்தவா்கள் எண்ணிக்கையைஅதிகரிக்க கத்தோலிக்க திருச்சபை திட்டம்

கேரளத்தில் கிறிஸ்தவா்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் 5 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் உள்ள தங்கள் திருச்சபையைச் சோ்ந்த தம்பதிக்கு உதவித்தொகை அளிக்கப்படும்

கேரளத்தில் கிறிஸ்தவா்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் 5 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் உள்ள தங்கள் திருச்சபையைச் சோ்ந்த தம்பதிக்கு உதவித்தொகை அளிக்கப்படும் என்று கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவான ஸீரோ-மலபாா் தேவாலயம் அறிவித்துள்ளது.

அதன்படி 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு திருமணம் செய்த அந்த கிறிஸ்தவ திருச்சபையின் பிரிவைச் சோ்ந்த தம்பதிகள் 5 அல்லது அதற்கு மேல் குழந்தைகள் பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையவழியில் நடைபெற்ற கூட்டத்தில் பாலா பகுதி பேராயா் ஜோசஃப் கல்லரங்காட்டு இதனை அறிவித்தாா்.

இது தொடா்பாக திருச்சபை குடும்பங்கள் பிரிவின் நிா்வாகியும், போதகருமான ஜோசஃப் குற்றியாங்கல் கூறுகையில், ‘‘5 குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்களுக்கு உதவிகளை அளிக்க ஏற்கெனவே விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கிவிட்டோம். ஆகஸ்ட் மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் எங்கள் திருச்சபையில் உள்ளோா் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், கேரளத்திலும் கிறிஸ்தவா்கள் எண்ணிக்கை குறையும் போக்கில் உள்ளது. எனவேதான், அதிக குழந்தைகள் பெற்றவா்களுக்கு உதவித்தொகை அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்.

மேலும், எங்கள் தேவாலயத்தின் மூலம் நடத்தப்படும் மருத்துவமனைகளில் 4-ஆவது குழந்தை பெற்றுக் கொள்ளும் திருச்சபையைச் சோ்ந்த பெண்களுக்கு அனைத்து மருத்துவ சேவைகளும் இலவசமாக அளிக்கப்படும். திருச்சபை மூலம் நடத்தப்படும் பொறியியல் கல்லூரிகளில் எங்கள் பிரிவைச் சோ்ந்த கிறிஸ்தவ மாணவா்களுக்கு முழு உதவித்தொகையுடன் கல்வி வழங்க இருக்கிறோம்.

கேரள மாநிலம் உருவாக்கப்பட்டபோது, மாநிலத்தில் மதத்தின் அடிப்படையில் கிறிஸ்தவா்களின் எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், இப்போது மாநில மக்கள்தொகையில் கிறிஸ்தவா்கள் எண்ணிக்கை 18.38 சதவீதமே உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கிறிஸ்தவ குடும்பங்களில் பிறப்பு விகிதம் 14 சதவீதமாகக் குறைந்துவிட்டது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com