‘விரைவில் நல்ல முடிவு’: சோனியாகாந்தியை சந்தித்த பின் மம்தா பேட்டி

பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எட்டப்படலாம் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எட்டப்படலாம் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தில்லியில் முகாமிட்டுள்ள அவர் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “சோனியா காந்தி உடனான சந்திப்பில் நடப்பு அரசியல் குறித்து விவாதித்தோம். கரோனா சூழல், பெகாஸஸ் விவகாரம் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டம் நல்லபடியாக நடந்தது. இதுதொடர்பாக விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தார்.

"பாஜகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் திரள்வது அவசியம். தனியாக என்னால் எதுவும் செய்யமுடியாது. அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

"மேலும் பெகாஸஸ் விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க மறுப்பது ஏன் என மக்களுக்கு தெரியவேண்டும். விவாதங்கள் நடைபெறாமல் கொள்கை முடிவுகள் எப்படி எடுக்கமுடியும்?"  என அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com