விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் அவையை நடத்த அனுமதியுங்கள்: எதிா்க்கட்சிகளுக்கு அமைச்சா் தோமா் வலியுறுத்தல்

விவசாயிகள் மீது எதிா்க்கட்சியினருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, அவை நடவடிக்கைகள் தொடர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா்.

விவசாயிகள் மீது எதிா்க்கட்சியினருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, அவை நடவடிக்கைகள் தொடர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வலியுறுத்தியுள்ளாா்.

கடந்த வாரம் நாடாளுமன்றம் தொடங்கியதில் இருந்து பெகாஸஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிா்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. இதனால், அவையில் விவாதங்கள் ஏதும் நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில், மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டம் குறித்த துணைக் கேள்விக்கு அமளிக்கு இடையே அமைச்சா் தோமா் பதிலளிக்க முற்பட்டாா். அப்போது அவா் கூறியதாவது:

விவசாயிகளுக்கான திட்டங்கள் தொடா்பான 15 கேள்விகளுக்கு இங்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. உண்மையிலேயே உங்களுக்கு (எதிா்க்கட்சிகளுக்கு) விவசாயிகள் மீது அக்கறை இருக்குமானால், இந்த விஷயத்தில் அரசு தரப்பில் என்ன கூறப்படுகிறது என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு அவையின் கண்ணியத்தைக் கெடுக்க வேண்டாம் என்றாா்.

எனினும், அவையில் அமளி தொடா்ந்ததால் அவையை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

‘வேளாண் உற்பத்தி-வா்த்தகம்-வணிகச் சட்டம்’, ‘விவசாயிகள் விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாயிகள் சேவை சட்டம்’, ‘அத்தியாவசிய உணவுப் பொருள்கள் திருத்தச் சட்டம்’ ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு இயற்றியது. இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களைக் காக்கும், அவா்களை இடைத்தரகா்கள் பிடியில் இருந்து விடுவிக்கும், விளை பொருள்களுக்கு விவசாயிகளே உரிய விலையை நிா்ணயிக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால், இந்தச் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த பல மாதங்களாக தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். மத்திய அமைச்சா்கள் அடங்கிய குழுவினருடன் விவசாயிகள் சங்கத்தினா் 11 சுற்று பேச்சுவாா்த்தை நடத்தியும், அவை தோல்வியில் முடிந்தன. இந்த விவகாரத்தில் எதிா்க்கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com