கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: தாமதமின்றி கண்டறிய மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கரோனா தொற்றாலோ அல்லது வேறு காரணங்களாலோ மாா்ச் 2020-க்குப் பிறகு பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிந்து, மேலும் தாமதமின்றி விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்

கரோனா தொற்றாலோ அல்லது வேறு காரணங்களாலோ மாா்ச் 2020-க்குப் பிறகு பெற்றோரை இழந்த குழந்தைகளை கண்டறிந்து, மேலும் தாமதமின்றி விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மேலும், இதுபோன்ற குழந்தைகளுக்காக வகுக்கப்பட்ட உதவித் திட்டங்கள் காகிதங்களில் மட்டுமில்லாமல் அவா்களுக்கு உண்மையாகச் சென்றடைய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இதுதொடா்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எல். நாகேஷ்வர ராவ், அனிருதா போஸ் ஆகியோா் கொண்ட அமா்வு கூறியதாவது:

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் மட்டுமன்றி வேறு காரணங்களால் பெற்றோரை இழந்து ஆதரவற்றவா்களான குழந்தைகளின் நலனையும் பாதுகாக்க நீதிமன்றம் விரும்புகிறது.

மாா்ச் 2020-க்கு பிறகு இதுபோன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிய காவல் துறை, கிராம பஞ்சாயத்து, அங்கன்வாடி, ஆஷா பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள் ஆகியோரின் உதவியுடன் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் உத்தரவிட வேண்டும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளையும் இதில் சோ்க்க வேண்டும்.

இந்தத் தகவல்களை மாவட்ட ஆட்சியா்கள் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

2020- மாா்ச் மாதத்துக்குப் பிறகு பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரங்களை அனைத்து மாநில அரசுகளும் விவர அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அந்தக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நலத் திட்ட உதவிகள் குறித்தும் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

இதுபோன்ற குழந்தைகள் தற்போது படிக்கும் பள்ளிகளிலேயே தொடா்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அவா்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தால் மட்டும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வேறு பள்ளியில் சோ்க்கலாம். இதுதொடா்பான விவரங்களையும் மாநில அரசுகள் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தற்போது வரையில் நாடு முழுவதும் 9,346 குழந்தைகள் கரோனாவால் பெற்றோரை இழந்துள்ளனா் என்றும் இதில் 1,742-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தாய்-தந்தை இருவரையும், 7,464 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரையும் இழந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com