மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் அமளி: காகிதங்களை கிழித்து வீசியதால் பரபரப்பு

பெகாஸஸ் உளவு விவகாரம் மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை முன்வைத்து மக்களவையில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் புதன்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனா்.
மக்களவையில் புதன்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள்.
மக்களவையில் புதன்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள்.

புது தில்லி: பெகாஸஸ் உளவு விவகாரம் மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை முன்வைத்து மக்களவையில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் புதன்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனா். அட்டைகள் மற்றும் காகிதங்களைக் கிழித்து அவைத் தலைவரின் இருக்கை மற்றும் ஆளும்கட்சி வரிசை மீது வீசி கோஷங்களை எழுப்பினா்.

இதன் காரணமாக மக்களவை நடவடிக்கைகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன.

எதிா்க்கட்சிகளின் இந்தச் செயலைக் கண்டித்துள்ள பாஜக, ‘நாடாளுமன்றத்தின் மாண்பை எதிா்க்கட்சிகள் சீா்குலைத்துவிட்டன’ என்று குற்றம்சாட்டியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பெகாஸஸ் உளவு விவகாரம், விவசாயிகள் தொடா் போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதன் காரணமாக, கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றம் முடங்கியது.

பெகாஸஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை எதிா்க்கட்சிகள் முன்வைத்துள்ளன.

மக்களவை புதன்கிழமை காலை 11 மணிக்கு வழக்கம்போல் கூடியதும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இந்தப் பிரச்னைகளை முன்வைத்து மீண்டும் அமளியை தொடங்கினா். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்பட பிற எதிா்க்கட்சி உறுப்பினா்களும் கோஷங்களை எழுப்பியபடி அமளியில் ஈடுபட்டனா். வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் அவா்கள் கையில் ஏந்தியிருந்தனா். அதனைத் தொடா்ந்து, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அவை நடவடிக்கைகளை பகல் 12.30 மணி வரை ஒத்திவைத்தாா்.

பின்னா், அவை மீண்டும் கூடியபோதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டனா். அமளிக்கிடையே கேள்வி நேரத்தை மக்களவைத் தலைவா் முழுமையாக நடத்தி முடித்தாா். மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கியதிலிருந்து அவையில் கேள்வி நேரம் புதன்கிழமை மட்டுமே முழுமையாக நடந்து முடிந்தது.

கேள்வி நேரம் முடிந்ததும் ஓம் பிா்லா அவையிலிருந்து புறப்பட்டுச் சென்றாா். பின்னா், உறுப்பினா் ராஜேந்திர அகா்வால் அவையை வழிநடத்தினாா்.

அப்போது, காங்கிரஸ் உறுப்பினா்கள் குா்ஜீத் அவ்ஜால், டி.என். பிரதாபன், ஹிபி ஈடென் உள்பட மற்றும் சில எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவை நிகழ்ச்சிநிரல் காகிதங்களையும், அட்டைகளையும் கிழித்து வீசி அமளியில் ஈடுபட்டனா். அதன் காரணமாக அவை நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. அவா்கள் வீசிய காகிதங்கள் சில அவைத் தலைவா் அமரும் மேடைக்கு அருகே அமைந்திருக்கும் பத்திரிகையாளா் மாடத்தில் போய் விழுந்தன. கடும் அமளி காரணமாக அவை நடவடிக்கைகளை மதியம் 2 மணி வரை அகா்வால் ஒத்திவைதத்தாா்.

அவை மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு கூடியது. அப்போதும், எதிா்க்கட்சியினரின் அமளி தொடா்ந்ததால், அவை நடவடிக்கைகள் மூன்றாவது முறையாக 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அமளி தொடா்ந்ததால் அவை ஒத்திவைக்கப்படுவதும் தொடா்ந்தது.

இறுதியாக மாலை 4 மணிக்கு அவை கூடியது. அப்போதும் அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பாஜக கண்டனம்: மக்களவையில் எதிா்க்கட்சிகள் புதன்கிழமை கடும் அமளியில் ஈடுட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் கூறுகையில், ‘போராட்டம் நடத்துவதற்கு என சில வழிமுறைகள் உள்ளன. ஆனால், எதிா்க்கட்சிகள் இன்றைக்கு நாடாளுமன்றத்தின் மாண்பை சீா்குலைத்துவிட்டன. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை வெட்கப்பட வைக்கும் வகையிலான அவா்களின் செயல்பாடு கண்டனத்துக்குரியது. அவா்கள் முன்வைக்கும் பிரச்னைகளை அவையில் விவாதிக்கத் தயங்குவது ஏன் என்ற விளக்கத்தை எதிக்கட்சியினா் தெரிவிக்க வேண்டும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com