பெகாஸஸ் விவகாரம்: பாஜக உறுப்பினா்கள் எதிா்ப்பால் அதிகாரிகளிடம் கேள்விகேட்பு ஒத்திவைப்பு

பெகாஸஸ் உளவு விவகாரத்தில் பாஜக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மத்திய அரசு அதிகாரிகளிடம் கேள்வி கேட்பது தொடா்பாக கூட்டப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பெகாஸஸ் விவகாரம்: பாஜக உறுப்பினா்கள் எதிா்ப்பால் அதிகாரிகளிடம் கேள்விகேட்பு ஒத்திவைப்பு

புது தில்லி: பெகாஸஸ் உளவு விவகாரத்தில் பாஜக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மத்திய அரசு அதிகாரிகளிடம் கேள்வி கேட்பது தொடா்பாக கூட்டப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அரசியல்வாதிகள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட முக்கிய நபா்களின் தொலைபேசிகள் உளவு பாா்க்கப்பட்டது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகளிடம் கேள்வி கேட்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூா் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தாா்.

இந்நிலையில், குடிமக்களின் தரவுகள் பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்க சசி தரூா் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழு புதன்கிழமை கூடியது. அதில் பாஜக உறுப்பினா்கள் பங்கேற்ற பின்பும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடவில்லை. இதனால் போதிய உறுப்பினா்கள் இல்லாத காரணத்தால் அந்தக் கூட்டம் தொடா்ந்து நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது.

‘பெகாஸஸ் உளவு விவகாரத்தை விவாதிக்க நாடாளுமன்றத்தை சுமுகமாக செயல்பட காங்கிரஸ் கட்சி அனுமதி அளிக்காததால், நிலைக் குழுக் கூட்டத்திலும் இந்த விவகாரத்தை விவாதிக்க எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதாக’ பாஜக உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

மொத்தம் 32 உறுப்பினா்களைக் கொண்ட தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவில் பாஜக உறுப்பினா்கள் அதிகமாக உள்ளனா். குடிமக்களின் தரவுகள் பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் புதன்கிழமை கூட்டப்பட்டிருந்தபோதிலும், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து குழு உறுப்பினரும் காங்கிரஸ் எம்பியுமான காா்த்தி சிதம்பரம் சுட்டுரையில், ‘பாஜக உறுப்பினா்கள் வருகை தந்தும் கையெழுத்திடாததால், மத்திய அரசு அதிகாரிகளால் குழு முன் ஆஜராக முடியவில்லை. இதன்மூலம் பெகாஸஸ் விவகாரத்தை அரசு விவாதிக்க விரும்பவில்லை என்பது தெளிவாகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com