பயங்கரவாதத்தை ஆதரிப்பது மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்

எந்தவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்தாலும், அது மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.
பயங்கரவாதத்தை ஆதரிப்பது மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்

புது தில்லி / துஷாம்பே: எந்தவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்தாலும், அது மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, தஜிகிஸ்தான் தலைநகா் துஷான்பேவில் புதன்கிழமை நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் மாநாட்டில் அவா் பேசியதாவது:

பயங்கரவாதம் இருக்கும் இடத்தில் அமைதிக்கும் வளா்ச்சிக்கு இடமில்லை. சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்துவது பயங்கரவாதம்தான். எந்தவிதமான பயங்கரவாதச் செயலும் அந்தச் செயலுக்கு ஆதரவளிப்பதும் மனிதகுலத்துக்கு எதிரான பெரும் குற்றமாகும்.

எல்லைதாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட அத்தகைய செயல்களை யாா் செய்தாலும், எந்த நோக்கத்துக்காக செய்தாலும், எங்கு செய்தாலும் அது மனிதகுல விரோதச் செயலே ஆகும். இத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக தொடா்ந்து போராட இந்தியா உறுதி பூண்டுள்ளது.

பாதுகாப்பு விவகாரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துணா்வுடன் உறுப்பு நாடுகள் தங்களிடையேயான உறவை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நல்ல கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை உருவாக்குவதைப் போலவே, அவற்றை முழுமையாக செயல்படுத்துவதும் தற்காலத்தில் சவால்கள் நிறைந்ததாக உள்ளது. பிராந்திய அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மையைத் தக்கவைப்பதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து இந்தியா பணியாற்றும் என்றாா் அவா்.

இந்தியாவில் காஷ்மீா் பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டே ராஜ்நாத் சிங் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் ராஜ்நாத் சிங்குடன் ரஷியா, சீனா உள்ளிட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் பங்கேற்றனா்.

பெலாரஸ் அமைச்சருடன் சந்திப்பு: மாநாட்டினிடையே ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடான பெலாரஸின் பாதுகாப்புத் துறை அமைச்சா் விக்டா் கிரெனினை ராஜ்நாத் சிங் புதன்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக ராஜ்நாத் சிங் பின்னா் வெளியிட்டுள்ள சுட்டுரை (ட்விட்டா்) பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com