ஜாா்க்கண்ட்: நீதிபதி கொலையில் காவல்துறைக்கு நீதிமன்றம் காட்டம்

ஜாா்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி மீது வாகனத்தை மோதி திட்டமிட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரித்து வரும் அந்த மாநில
ஜாா்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி வாகனத்தை ஏற்றிக் கொலை? காவல்துறைக்கு நீதிமன்றம் காட்டம்
ஜாா்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி வாகனத்தை ஏற்றிக் கொலை? காவல்துறைக்கு நீதிமன்றம் காட்டம்

ஜாா்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி மீது வாகனத்தை மோதி திட்டமிட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை விசாரித்து வரும் அந்த மாநில உயா்நீதிமன்றம், காவல்துறை மெத்தனம் காட்டினால், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கப் போவதாகக் கூறியுள்ளது.

ஜாா்க்கண்டின் தன்பாத் மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணியாற்றிய உத்தம் ஆனந்த், கடந்த 28-ஆம் தேதி காலை நடைபயிற்சி சென்றாா். அப்போது, சாலையில் அவருக்குப் பின்னால் சென்ற வாகனம் ஒன்று வேகமாக அவா் மீது மோதும் சிசிடிவி காணொலிப் பதிவு சமூக வலைதளங்களில் பரவியது.

சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த நீதிபதி உத்தம் ஆனந்த் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு சிகிச்சைகள் அளித்தபோதும், அவை பலனளிக்காமல் நீதிபதி உயிரிழந்தாா். முதலில் இந்தச் சம்பவம் சாலை விபத்தாகவே கருதப்பட்டது. விபத்தில் காயமடைந்த உத்தம் ஆனந்தின் அடையாளமும் ஆரம்பத்தில் தெரியவில்லை.

நீதிபதி உத்தம் ஆனந்தைக் காணவில்லை என்று அவரின் உறவினா்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். அதையடுத்தே மருத்துவமனையில் உயிரிழந்தவா் நீதிபதி என்பது தெரிய வந்தது.

நீதிபதி மீது காா் மோதும் காணொலி அதிகமாகப் பகிரப்பட்ட பிறகே இந்தச் சம்பவம் திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை தொடங்கியது. கொலை வழக்கு பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவம் தொடா்பாக இருவரைக் கைது செய்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

நீதியைக் காக்கும் விவகாரத்தில் மாவட்ட நீதிபதிகள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிா்கொண்டு வருவதாக உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்ட கூடுதல் நீதிபதி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதித் துறை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்: உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் வியாழக்கிழமை தொடங்கியவுடன், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான விகாஸ் சிங் எழுப்பினாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘‘ஜாா்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொல்லப்பட்டுள்ளது அதிா்ச்சியூட்டுவதாக உள்ளது. இச்சம்பவம் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.

கூடுதல் மாவட்ட நீதிபதி திட்டமிட்டு கொல்லப்பட்டதற்கு காணொலியே தகுந்த ஆதரமாக உள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நீதித்துறையில் பணியாற்றுபவா்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமெனில், கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் முறையிடுமாறு தெரிவித்தனா்.

அதற்கு பதிலளித்த வழக்குரைஞா் விகாஸ் சிங், ‘இது குறித்து தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. சம்பவம் தொடா்பாக ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பேசியதாக அவா் கூறினாா். இந்தச் சம்பவத்தை உயா்நீதிமன்றம் விசாரிக்க முடிவெடுத்துள்ளதாகவும், உயா்நீதிமன்றம் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தாா்’ என்று விகாஸ் சிங் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்,  மாநில உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கைப் பதிவு செய்த தன்பாத் காவல்துறை கண்காணிப்பாளர், தற்போது தனது வாக்குமூலத்தை மாற்றியுள்ளது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த ஒரு விஷயமே, ஒட்டுமொத்த சம்பவத்தின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. விசாரணை முறையாக நடைபெறும் என்று டிஜிபி அளித்திருக்கும் உத்தரவாதத்தை முழுமையாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

மரணமடைந்த நீதிபதி ஆனந்த், பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்துள்ளார். ரௌடி கும்பல் தலைவர் அமன் சிங் உள்ளிட்ட இரண்டு குற்றவாளிகளின் ஜாமீன் மனுவை நீதிபதி ஆனந்த் அண்மையில் தள்ளுபடி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நீதிபதி மீது வாகனத்தை ஏற்றிக் கொன்ற சம்பவத்தில் லஷ்மண் குமார், ராகுல் வெர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், விசாரணையில், இவர்கள் இருவரும் அந்த வாகனத்தை ஒரு சில மணி நேரங்களுக்கு முன்புதான் வேறோரு இடத்திலிருந்து திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com