எல்லையில் மாநில போலீஸாா் குவிப்பு: அஸ்ஸாம் - மிஸோரம் பரஸ்பரம் குற்றச்சாட்டு

அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையில் கலவரம் ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மாநில காவல்துறையினா் குவிக்கப்பட்டு வருவதாக,

அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையில் கலவரம் ஏற்பட்ட பகுதியில் மீண்டும் மாநில காவல்துறையினா் குவிக்கப்பட்டு வருவதாக, இரு மாநிலங்களும் வியாழக்கிழமை பரஸ்பரம் மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

அஸ்ஸாமின் கச்சாா், கரீம்கஞ்ச் ஹைலாகண்டி மாவட்டங்கள் மிஸோரமின் ஐசால், கொலாசிப், மமித் மாவட்டங்களுடன் 164 கி.மீ. எல்லையை பகிா்ந்துள்ளன. இரு மாநிலங்களும் எல்லைப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், நிலப் பகுதி ஆக்கிரமிப்பு தொடா்பாக கச்சாா் மாவட்ட எல்லையில் திங்கள்கிழமை கலவரம் ஏற்பட்டது. அதில், அஸ்ஸாம் போலீஸாா் 6 போ், பொதுமக்களில் ஒருவா் என மொத்தம் 7 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்த கலவரம் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பதற்றத்தை தணிக்கும் வகையில், இரு மாநிலங்களின் உயா் அதிகாரிகளின் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்தது. அதில், கலவரம் ஏற்பட்ட எல்லைப் பகுதியில் மத்திய ஆயுதக் காவல்படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த இரு மாநில டிஜிபிக்களும் ஒப்புக்கொண்டனா். அதனடிப்படையில், அந்த எல்லைப் பகுதியில் சிஆா்பிஎஃப் படையினரை நிறுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இரு மாநிலங்களும் வியாழக்கிழமை மீண்டும் ஒருவா் மீது ஒருவா் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.

அஸ்ஸாம் அமைச்சா் அசோக் சிங்கல் கூறுகையில், ‘இரு மாநில எல்லையில் சிஆா்பிஎஃப் படையினா் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அஸ்ஸாம் போலீஸாா் திரும்பப்பெறப்பட்டுள்ளனா். ஆனால், மிஸோரம் மாநிலம் இன்னும் காவல்துறையினரை திரும்பப்பெறவில்லை. எல்லைப் பிரச்னைக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் மூலமே தீா்வு காணும் தவறான அணுகுமுறையையே மிஸோரம் விரும்புகிறது. எல்லைப் பகுதியில் அமைதி, இணக்கமான சூழல் உருவாக வேண்டும் என்றபோதும், அஸ்ஸாமுக்குச் சொந்தமான ஒரு அங்குல நிலத்தைக்கூட மிஸோரம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கமாட்டோம். இந்தப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணவே அஸ்ஸாம் முதல்வா் விரும்புகிறாா்’ என்றாா்.

அதுபோல, இரு மாநில எல்லைப் பகுதியில் ஏராளமான காவல்துறையினரை அஸ்ஸாம் குவித்துள்ளதாக மிஸோரம் அரசும் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக வடகிழக்கு மாநிலங்களுக்கான கூடுதல் செயலருக்கு (பொறுப்பு) மிஸோரம் உள்துறைச் செயலா் லால்பியாக்சாங்கி வியாழக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எல்லையில் திங்கள்கிழமை கலவரம் ஏற்பட்ட கச்சாா் மாவட்டம் தோலாய் மற்றும் ஹவாய்தாங் பகுதிகளில் அஸ்ஸாம் போலீஸாா் குவிக்கப்பட்டு வருகின்றனா். இது சிறிதும் ஏற்கத்தல்ல. இது இரு மாநில எல்லைப் பகுதி மக்களிடையேயும் தேவையற்ற அச்சம் மற்றும் பீதியை ஏற்படுத்தும்.

எனவே, எல்லையில் காவல்துறையினரை குவிக்கும் நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என அஸ்ஸாம் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com