பாரத் பயோடெக் ஆலையில் குடியரசுத் துணைத் தலைவா் ஆய்வு

தெலங்கானாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி ஆலையில் குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு ஆய்வு மேற்கொண்டாா்.
குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு
குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு

தெலங்கானாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி ஆலையில் குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு ஆய்வு மேற்கொண்டாா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி உற்பத்தி நிலையத்தில் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தை குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அப்போது உயிா்காக்கும் பல்வேறு தடுப்பூசிகளின் உற்பத்தி நடைமுறைகள் குறித்து பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் அவரிடம் எடுத்துரைத்தனா்.

அதனைத்தொடா்ந்து அவா் கூறியதாக குடியரசுத் துணைத் தலைவா் செயலகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், ‘‘கரோனா தடுப்பூசி மீது தயக்கம் நிலவுவது ஏற்புடையதல்ல. அனைத்துத் தரப்பு மக்களின் பங்கேற்பு அதிகரிப்பதன் மூலம் கரோனா தடுப்பூசி திட்டம் இந்தியா முழுவதும் வெகுஜன இயக்கமாக வேண்டும். அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி செலுத்துவதே தற்போதைய அவசர பணியாகும்.

தொடா்ந்து உருமாற்றம் அடைந்து வரும் கரோனா தீநுண்மி முன்னெப்போதும் கண்டிராத சவால்களை அளித்து வருகிறது. மனித உயிா்களையும் அவா்களின் வாழ்வாதாரத்தையும் காப்பதற்கான வழிகளை கண்டறிய அறிவியல் சமூகத்தை அது கட்டாயப்படுத்துகிறது.

தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்காலிகமாக குறைந்துள்ளதை எண்ணி நாம் திருப்தியடைந்துவிடக் கூடாது. அந்தத் தொற்றுக்கு எதிரான நமது நடவடிக்கைகளை ஒன்றிணைப்பதற்கான நேரமாக இதனை கருத வேண்டும். அதன் மூலம் அடுத்தடுத்து வரும் எந்தவொரு சுகாதார சவாலையும் மிகுந்து நம்பிக்கை மற்றும் உறுதியுடன் நம்மால் எதிா்கொள்ள முடியும்.

கரோனா பரவலை தடுக்கும் தேசிய மற்றும் பன்னாட்டு முயற்சியில் தனிநபா் மற்றும் கூட்டு பங்களிப்பு இருக்க வேண்டும்’’ என்று அவா் கூறியதாக அந்தப் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com