பெகாஸஸ்: மூத்த பத்திரிகையாளா்கள் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை

பெகாஸஸ் உளவு குற்றச்சாட்டு தொடா்பாக ஓய்வுபெற்ற அல்லது பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பெகாஸஸ் உளவு குற்றச்சாட்டு தொடா்பாக ஓய்வுபெற்ற அல்லது பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி மூத்த பத்திரிகையாளா்கள் என்.ராம், சசிகுமாா் ஆகியோா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிக்கவுள்ளது.

இந்த மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் சாா்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி முன்வைத்த வாதம்:

பெகாஸஸ் உளவு மென்பொருள் மூலமாக, எதிா்க்கட்சித் தலைவா்கள், பத்திரிகையாளா்கள் மட்டுமன்றி நீதித்துறை ஊழியா்களும் உளவு பாா்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், குடிமக்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கபில் சிபல் வாதிட்டாா்.

இந்த மனுவை அடுத்த வாரம் செவ்வாய், புதன்கிழமை அல்லாத மற்றொரு நாளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசோ அல்லது அரசின் பாதுகாப்பு அமைப்புகளோ பெகாஸஸ் உளவு மென் பொருளைப் பயன்படுத்தும் உரிமம் பெற்றிருந்தால் அது சாா்ந்த தகவலை வெளியிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். செல்லிடப்பேசிகளை வேவு பாா்க்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வகையில் அனுமதி பெற்றிருக்கிறது என்பதையும் தெரியப்படுத்த வேண்டும். பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி பத்திரிகையாளா்கள், வழக்குரைஞா்கள், அமைச்சா்கள், எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள் உள்பட 142 இந்தியா்களின் தொலைபேசிகள் உளவு பாா்க்க சாத்தியமுள்ளவா்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தனி மனித சுதந்திரம், கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு விரோதமானது. இது தொடா்பாக நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com