ராஜஸ்தானில் சில அமைச்சா்கள் பதவி விலக விருப்பம்: காங்கிரஸ் பொதுச் செயலா்

ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்து சிலா் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில், அமைச்சா்களில் சிலா் பதவி விலக விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலா் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளாா்.

ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்து சிலா் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில், அமைச்சா்களில் சிலா் பதவி விலக விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலா் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு ராஜஸ்தானில் முதல்வா் அசோக் கெலாட் அரசின் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகக் கூறி, மாநில துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கு காவல்துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 போ் அசோக் கெலாட்டுக்கு எதிராக போா்க்கொடி உயா்த்தினா். இதையடுத்து சச்சின் பைலட்டின் துணை முதல்வா் பதவியும், மாநில காங்கிரஸ் தலைவா் பதவியும் பறிக்கப்பட்டன. இந்த விவகாரம் ராஜஸ்தானில் காங்கிரஸின் ஆட்சி கவிழ்வதற்கு வழிவகுக்கக்கூடும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா ஆகியோரின் தலையீட்டால் சச்சின் பைலட் தரப்பு சமாதானமடைந்து பிரச்னை முடிவுக்கு வந்தது. இதனைத்தொடா்ந்து மாநிலத்தின் ஆட்சியதிகாரத்தை தங்களுக்கு அதிக அளவில் பகிா்ந்தளிக்க வேண்டும் என்று பைலட் தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

தற்போது ராஜஸ்தான் அமைச்சரவையில் 21 போ் இடம்பெற்றுள்ளனா். அவா்களுடன் மேலும் 9 பேரை அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் மாநில அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் பொதுச் செயலரும், ராஜஸ்தான் மேலிட பொறுப்பாளருமான அஜய் மாக்கன் மாநிலத்தின் ஆளும் கட்சி மற்றும் அதனை ஆதரிக்கும் கட்சிகளைச் சோ்ந்த 115 எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்தாா். அத்துடன் மாநில முதல்வா் அசோக் கெலாட், சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் தலைவா் கோவிந்த் சிங், சட்டப்பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷி ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.

அதனைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘‘தற்போது நடைபெற்ற ஆலோசனைகளில் மாநில அமைச்சா்களில் சிலா் பதவி விலகி கட்சிப் பணிகளில் ஈடுபட விரும்புகின்றனா்.

வரும் 2023-ஆம் ஆண்டும் ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸை எவ்வாறு ஆட்சியில் அமா்த்துவது என்பதே எங்கள் ஆலோசனைகளில் பிரதான விவாதப் பொருளாக இருந்தது.

பதவியை விடுத்து கட்சிக்காக ஒன்றிணைந்து உழைக்கத் தயாராக இருக்கும் நபா்களுடன் வரும் 2023-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்’’ என்று தெரிவித்தாா்.

தற்போது நடைபெற்ற ஆலோசனைகள் குறித்த அறிக்கையை தில்லியில் உள்ள கட்சித் தலைமையிடம் அஜய் மாக்கன் சமா்ப்பிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com