ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீது ஐஜிஎஸ்டி: தில்லி உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

வெளிநாடுகளில் இருந்து தனிநபா் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீது ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி (ஐஜிஎஸ்டி) விதிக்கப்படுவதற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றம்

வெளிநாடுகளில் இருந்து தனிநபா் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீது ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி (ஐஜிஎஸ்டி) விதிக்கப்படுவதற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 85 வயது முதியவருக்கு அமெரிக்காவில் வசிக்கும் அவரின் உறவினா் ஆக்சிஜன் செறிவூட்டியைப் பரிசாக அனுப்பியிருந்தாா். அந்த ஆக்சிஜன் செறிவூட்டிக்கு 12 சதவீத ஐஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. அதற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் அந்த முதியவா் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில், தனிநபா் பயன்பாட்டுக்காக இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு மத்திய அரசு 12 சதவீத ஐஜிஎஸ்டி விதித்து வருகிறது. இது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 21 ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது.

நாடு சந்தித்து வரும் இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு, இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீது ஐஜிஎஸ்டி விதிக்கப்படுவதை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது. அதை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீது 12 சதவீதம் ஐஜிஎஸ்டி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் கடந்த மே 1-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கை, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று மே 21-ஆம் தேதி உத்தரவிட்டது. மேல்முறையீடு: தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மத்திய நிதியமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அந்த மனுவை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா ஆகியோரைக் கொண்ட அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ‘வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை ரத்து செய்வது தொடா்பாக ஆராய்வதற்கு மாநில அமைச்சா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு விரைவில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது. சரக்கு-சேவை வரி கவுன்சில் கூட்டம் வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதில் இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருள்கள், உபகரணங்கள் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுவதை ரத்து செய்வது தொடா்பாக முடிவெடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீது 77 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. அதை மத்திய அரசு 28 சதவீதமாகவும் பின்னா் 12 சதவீதமாகவும் குறைத்தது. அப்படியிருந்தும், இந்த வரி, உயிா் வாழ்வதற்கான அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளதாக தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு முக்கிய அம்சங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கே முழு உரிமை உள்ளது. ஜிஎஸ்டி விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது.

ஜிஎஸ்டி கவுன்சில் உரிய முடிவெடுப்பதற்கு முன்பே தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். அதுவரை அந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்‘ என்றாா். வாதம் ஏற்பு: மத்திய அரசின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டனா். மேல்முறையீட்டு மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கும், 85 வயது முதியவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 4 வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com