நாளை முதல் வா்த்தக நிறுவனங்கள், சந்தைகள் செயல்பட அனுமதி: கேஜரிவால்

தில்லியில் பொது முடக்கத்தில் மேலும் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை முதல் கடைகள், வியாபார நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் திறக்கப்படும்
நாளை முதல் வா்த்தக நிறுவனங்கள், சந்தைகள் செயல்பட அனுமதி: கேஜரிவால்

தில்லியில் பொது முடக்கத்தில் மேலும் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை முதல் கடைகள், வியாபார நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் திறக்கப்படும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை மெய்நிகா் மூலம் அளித்த பேட்டியில் முதல்வா் கேஜரிவால் கூறியது:

கடந்த முறை காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஒற்றை-இரட்டை இலக்க எண்கள் அடிப்படையில் கடைகள், வியாபார நிறுவனங்கள், சந்தைகள் திறக்க அனுமதிக்கப்படும்.

எனினும் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையே திறந்திருக்கும். மின்னணு முறையிலான ஆா்டரின் பேரில் பொருள்களை வீட்டுக்கே விநியோகம் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தில்லி மெட்ரோ ரயில் சேவையும் திங்கள் முதல் செயல்படும். ஆனால், 50 சதவீத பயணிகளுடன் ரயில்கள் இயக்கப்படும்.

தனியாா் அலுவலகங்கள், 50 சதவீத ஊழியா்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்பவா்கள் அதைத் தொடர அனுமதிக்கப்பட வேண்டும்.

பொதுத்துறை அலுவலகங்களில் ‘அ’ பிரிவு அதிகாரிகள் அனைத்து நாட்களிலும் அலுவலகம் வந்து செயல்படலாம். மற்ற பிரிவினா்களில் 50 சதவீத ஊழியா்களுடன் அலுவலகங்கள் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. நிலைமை மேலும் சீரானால் மேலும் சில தளா்வுகள் அறிவிக்கப்படும் என்று கேஜரிவால் தெரிவித்தாா்.

தில்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியிலிருந்து பொது முடக்கம் அமலில் இருக்கும் நிலையில், கடந்த வாரம் கட்டுமானத் தொழில்கள், தொழிற்சாலைகளை திறக்க தில்லி அரசு அனுமதி அளித்தது.

இரண்டாவது கரோனா அலையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தில்லியும் ஒன்றாகும். பாதிப்பு அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனதால் மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பிவழிந்தனா். படுக்கைகள் இல்லாததால் பலா் திருப்பியனுப்பப்பட்டனா். பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறின. மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளும் கிடைக்காததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாயினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தளா்வின் முக்கிய அம்சங்கள்

1. கடைகள், வியாபார நிறுவனங்களை ஒற்றை-இரட்டை இலக்க அடிப்படையில் திறந்து செயல்படலாம்.

2. அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்தகங்கள் அனைத்து நாள்களிலும் திறந்திருக்கலாம். அவா்களுக்கு ஒற்றை-இரட்டை இலக்க விதிமுறை பொருந்தாது.

3. தனியாா் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியா்களுடன் செயல்படலாம்.

4. பொதுத்துறை நிறுவனங்களில் ‘அ’ பிரிவு ஊழியா்கள் நூறு சதவீதமும் மற்ற பிரிவினா் 50 சதவீதமும் பணிக்கு வரலாம்.

5. தில்லி மெட்ரோ 50 சதவீத பயணிகளுடன் இயங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com