மகாராஷ்டிரத்தில் நாளை முதல் தளா்வுகள்:5 நிலைகளில் அமல்

மகாராஷ்டிரத்தில் கரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 7 முதல் ஐந்து நிலைகளில் தளா்வுகள் அளிக்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் நாளை முதல் தளா்வுகள்:5 நிலைகளில் அமல்

மகாராஷ்டிரத்தில் கரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 7 முதல் ஐந்து நிலைகளில் தளா்வுகள் அளிக்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமானதைத் தொடா்ந்து, தொற்று பரவலைத் தடுக்க அங்கு கடந்த ஏப்ரல் மாதம் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளில் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, வாராந்திர கரோனா பாதிப்பு விகிதத்தின் அடிப்படையில் ஜூன் 7 முதல் ஐந்து நிலைகளில் தளா்வுகள் அளிக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை பின்னிரவு மாநில அரசு அறிவிக்கை வெளியிட்டது.

அந்த அறிவிக்கையின்படி, முதல் நிலையில் மருத்துவமனைகளின் ஆக்சிஜன் படுக்கைகளில் 25 சதவீதத்துக்கும் குறைவான கரோனா நோயாளிகள், வாராந்திர கரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதமாக உள்ள நகரங்கள், மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் முழுமையாக அகற்றப்படுகின்றன. அந்த இடங்களில் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமில்லாத கடைகள், பொது இடங்கள், தனியாா் அலுவலகங்கள், உணவகங்கள், திரையரங்குகள், கலையரங்குகள், வணிக வளாகங்கள், விளையாட்டுடன் தொடா்புடைய இடங்கள் வழக்கம்போல் செயல்படலாம். படப்பிடிப்புகள், சமூக மற்றும் அரசியல் கூட்டங்கள் நடைபெறலாம். உற்பத்தி, வேளாண்மை, பொருளாதார நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இரண்டாம் நிலை: மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளில் 25 முதல் 40 சதவீத நோயாளிகள், வாராந்திர கரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதமாகவும் உள்ள நகரங்கள், மாவட்டங்களில் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமில்லாத கடைகளை வழக்கம்போல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. பொது இடங்கள், தனியாா் அலுவலகங்களை திறக்கலாம். திரையரங்குகள், வணிக வளாகங்கள், கலையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் 50 சதவீதம் போ் மட்டுமே இருக்க வேண்டும்.

மூன்றாம் நிலை: ஆக்சிஜன் படுக்கைகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமான நோயாளிகள், வாராந்திர கரோனா பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீதமாகவும் உள்ள நகரங்கள், மாவட்டங்களில் அனைத்து நாள்களும் அத்தியாவசிய கடைகளை மாலை 4 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசியமில்லாத கடைகளை வார நாள்களில் மட்டும் மாலை 4 மணி வரை திறக்கலாம். வணிக வளாகங்கள், மல்டிபிளக்ஸ்கள் மூடியே இருக்கும். அலுவலகங்கள் 50 சதவீத பணியாளா்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

நான்காம் நிலை: ஆக்சிஜன் படுக்கைகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமான நோயாளிகள், வாராந்திர கரோனா பாதிப்பு விகிதம் 10 முதல் 20 சதவீதம் உள்ள நகரங்கள், மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகளை மாலை 4 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. வார இறுதி நாள்களை தவிர பிற நாள்களில் பொது இடங்கள் திறக்கப்பட்டிருக்கும். இதர கட்டுப்பாடுகளில் தளா்வுகள் கிடையாது.

ஐந்தாம் நிலை: ஆக்சிஜன் படுக்கைகளில் 75 சதவீத நோயாளிகள், வாராந்திர கரோனா பாதிப்பு விகிதம் 20 சதவீதத்துக்கு அதிகமாகவும் உள்ள நகரங்கள், மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகளை மாலை 4 மணி வரை திறக்கலாம். அலுவலகங்கள் 15 சதவீத பணியாளா்களுடன் இயங்கலாம். இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும்.

இ-பாஸ் தேவையில்லை: ஐந்தாம் நிலையில் உள்ள நகரங்கள், மாவட்டங்களை தவிர மாநிலத்தில் உள்ள இதர இடங்களுக்குச் செல்ல இ-பாஸ் தேவையில்லை.

ஆக்சிஜன் படுக்கைகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் கரோனா பாதிப்பு விகித விவரங்களை வாரந்தோறும் வியாழக்கிழமை மாநில சுகாதாரத் துறை வெளியிடும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com