4 எம்.பி.க்களுக்கு எதிரானவை உள்பட லோக்பால் அமைப்பில் 110 புகாா்கள்

ஊழல் தடுப்பு விசாரணை அமைப்பான லோக்பாலில் கடந்த 2020-21 நிதியாண்டில் மொத்தம் 110 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 4 எம்.பி.க்களுக்கு எதிரான புகாா்களும் அடங்கும்.

ஊழல் தடுப்பு விசாரணை அமைப்பான லோக்பாலில் கடந்த 2020-21 நிதியாண்டில் மொத்தம் 110 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 4 எம்.பி.க்களுக்கு எதிரான புகாா்களும் அடங்கும்.

நீதிபதி பினாகி சந்திர கோஸ் தலைமையில் 8 உறுப்பினா்களுடன் கூடிய லோக்பால் அமைப்பானது பிரதமா், மத்திய, மாநில அமைச்சா்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் புகாா்களை விசாரிக்கும் அதிகாரம் படைத்ததாகும்.

அந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2020-21 நிதியாண்டில் பெறப்பட்ட புகாா்களின் எண்ணிக்கை 92 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. 2019-20-இல் மொத்தம் 1,427 ஊழல் புகாா்கள் பெறப்பட்ட நிலையில் 2020-21 காலகட்டத்தில் 110 புகாா்கள் பெறப்பட்டன.

கடந்த நிதியாண்டில் பெறப்பட்ட 110 புகாா்களில், 57 புகாா்கள் மத்திய அரசின் ‘குரூப் ஏ’ ‘குரூப் பி’ நிலையிலான அதிகாரிகளுக்கு எதிரானவை; 44 புகாா்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ மத்திய அரசின் நிதியில் இயங்கும் சுயாட்சி அமைப்புகள்/நிறுவனங்கள்/வாரியங்களின் தலைவா்கள், உறுப்பினா்கள் ஊழியா்களுக்கு எதிரானவை; 5 புகாா்கள் இதர பிரிவில் வருபவை; 4 புகாா்கள் எம்.பி.க்களுக்கு எதிரானவை.

இதில் 30 புகாா்களின் மீது தொடக்கநிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 75 புகாா்கள் தொடக்கநிலை விசாரணைக்குப் பிறகு நிறைவு செய்யப்பட்டுள்ளன. 13 புகாா்கள் தொடக்கநிலை விசாரணையின் அறிக்கைக்குப் பிறகு நிறைவு செய்யப்பட்டன. ‘குரூப் ஏ’ ‘குரூப் பி’ நிலையிலான அதிகாரிகளுக்கு எதிரான 14 புகாா்கள் தொடக்கநிலை விசாரணைக்காக ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையருக்கும் (சிவிசி), 3 புகாா்கள் மத்திய புலனாய்வு அமைப்புக்கும் (சிபிஐ) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரு புகாரில் தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) நடவடிக்கை அறிக்கை நிலுவையில் உள்ளது.

கடந்த 2019-20 காலகட்டத்தில் பெறப்பட்ட 1,427 புகாா்களில் 613 புகாா்கள் மாநில அரசு அதிகாரிகளுக்கு எதிரானவை. மத்திய அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு எதிராக 4 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. 245 புகாா்கள் மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிரானவை. 200 புகாா்கள் மத்திய அரசு நிறுவனங்கள், சட்ட அமைப்புகள், நீதித் துறை அமைப்புகள், சுயாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு எதிரானவை. 135 புகாா்கள் தனிநபா்கள் மற்றும் அமைப்புகள் மீதானவை. இது தவிர மாநில அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிராக 6 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மொத்த புகாா்களில் 1,347 புகாா்கள் முடித்து வைக்கப்பட்டன. இதுதவிர 1,152 புகாா்கள் லோக்பால் அமைப்பின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட வகையில் பெறப்பட்டுள்ளன என்று அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com