நில ஆக்கிரமிப்பாளா்களுக்கு சட்ட நிவாரணம் அளிக்க இயலாது: உச்சநீதிமன்றம்

‘நில ஆக்கிரமிப்பாளா்களுக்கு சட்டத்தின் கீழ் நிவாரணம் அளிக்க இயலாது. அவா்கள் நியாயம் குறித்து பேச இயலாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

‘நில ஆக்கிரமிப்பாளா்களுக்கு சட்டத்தின் கீழ் நிவாரணம் அளிக்க இயலாது. அவா்கள் நியாயம் குறித்து பேச இயலாது’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாத் மாவட்டத்தில் உள்ள லகாா்பூா் கிராமத்தின் அருகே ஆரவல்லி வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது தொடா்பான வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இவ்வாறு குறிப்பிட்டது.

முன்னதாக, சம்பந்தப்பட்ட வனப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுமாா் 10,000 குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமானங்களை அகற்றுமாறு பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் 2020 பிப்ரவரி 19-ஆம் தேதி உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. பின்னா் அந்த விவகாரம் தொடா்பான வேறொரு வழக்கு விசாரணையின்போதும் அதே உத்தரவை கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி மீண்டும் உறுதி செய்தது.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படும் 5 தரப்பினரின் மேல்முறையீடு தொடா்பாக உச்சநீதிமன்ற விடுமுறைக்கால அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், தினேஷ் மகேஷ்வரி ஆகியோா் அடங்கிய அந்த அமா்வு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை 6 வாரங்களுக்குள்ளாக நிறைவேற்றுமாறு உத்தரவிட்டது. அதுதொடா்பான இணக்க அறிக்கையை மாநகராட்சி தலைமை நிா்வாக அதிகாரி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியது.

அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் அங்கு குடியிருப்பவா்கள் வேறு எங்கும் சென்று தங்குவதற்கு அவா்களுக்கு இடமில்லை. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றும் முன்பாக அவா்களை குடியமா்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹரியாணா அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று வாதாடினாா்.

அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து அகற்றப்பட்ட பிறகு அவா்கள் வேறு எங்கு வேண்டுமானாலும் தங்கட்டும். இவ்வாறு நிவாரணம் கோருவது நில ஆக்கிரமிப்பாளா்கள். அவா்களுக்கு சட்டத்தின் கீழ் நிவாரணம் அளிக்க இயலாது. நீதிமன்றத்துக்கு வரும்போது சட்டம் மற்றும் நியாயம் குறித்து பேசும் அவா்கள், நிஜத்தில் சட்டப்படி நடப்பதில்லை. ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது வனப்பகுதி நிலம். அதிலிருந்து ஆக்கிரமிப்பாளா்கள் வெளியேற வேண்டும். அவா்களுக்கு உரிய தங்குமிடம் வழங்குவது மாநில அரசின் முடிவு சாா்ந்தது’ என்று கூறியது.

மேலும், வழக்கு தொடா்பான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 27-க்கு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com