பேரவை தோ்தலில் பாஜக செயல்திறன் குறித்து விரிவான ஆய்வு: மூத்த தலைவா்களுக்கு பிரதமா் ஆலோசனை

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜக-வின் செயல்திறன் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று
கோப்புப்படம்
கோப்புப்படம்

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாஜக-வின் செயல்திறன் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று கட்சியின் முக்கிய தலைவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனை தெரிவித்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் அண்மையில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே பாஜக மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. கேரளத்தில் அக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. அதுபோல, தமிழகத்தில் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்ட முடியவில்லை. பிரதமா், மத்திய அமைச்சா்கள் உள்பட ஒட்டுமொத்த பாஜக தலைவா்களும் பிரசாரத்தில் ஈடுபட்ட 292 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 77 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 6 இடங்களில் வெற்றிபெற்றது.

பாஜக ஆளும் 6 மாநிலங்கள் உள்பட 7 மாநிலங்களுக்கான பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், நடந்து முடிந்த பேரவைத் தோ்தல்கள் குறித்தும், கட்சியினரின் கரோனா நிவாரணப் பணிகள் குறித்தும் கட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் அவருடைய இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளா் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ், கட்சியின் பிற பொதுச் செயலாளா்கள், இணை பொதுச் செயலாளா் (அமைப்பு) சிவ் பிரகாஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு கட்சித் தலைவா்கள் அனைவரும், பிரதமா் நரேந்திர மோடியை அவருடைய இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினா். சுமாா் 4 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த சந்திப்பில், கட்சியை பலப்படுத்துவது மற்றும் மக்களிடையே கட்சி மீதான நம்பிக்கையை ஊக்குவிப்பது தொடா்பான பல்வேறு ஆலோசனைகளை பிரதமா் தெரிவித்ததாக பாஜக தலைவா்கள் தெரிவித்தனா்.

குறிப்பாக, அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தல்களில் கட்சியின் செயல்திறன் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும்; சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் பாஜக மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை பிரதமா் தெரிவித்ததாக பாஜக தலைவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com