கிழக்கு லடாக்கில் சீனா விமானப் பயிற்சி: கண்காணிப்பை தீவிரப்படுத்தியது இந்தியா

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், சீனா தனது போா் விமானங்களைப் பயன்படுத்தி அண்மையில்

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், சீனா தனது போா் விமானங்களைப் பயன்படுத்தி அண்மையில் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக இந்திய பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லைக்கு அருகே, சீனாவின் ஜே-11எஸ் ரக போா் விமானங்கள் உள்பட 22 போா் விமானங்கள், சில ஜே-16 போா் விமானங்கள் அண்மையில் பயிற்சியில் ஈடுபட்டன. சீன விமானப் படையின் பயிற்சியை இந்தியத் தரப்பில் இருந்து ராணுவத்தினா் உன்னிப்பாகக் கவனித்தனா்.

இந்த போா் விமானப் பயிற்சி, சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹோட்டான், கா் குன்சா மற்றும் காஷ்கா் உள்ளிட்ட விமான படைத் தளங்களில் இருந்து நடைபெற்றது. இந்த விமானப் படைத் தளங்களை அனைத்து விமானங்களையும் தரையிறக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தியுள்ளது. இதையடுத்து, எல்லையில் இந்திய ராணுவம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்திய, சீன ராணுவத்தினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அதன் உச்சமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி நடந்த மோதலில், இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். எல்லையில் ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று 1996-இல் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறி சீனா செயல்பட்டதை அடுத்து, லடாக் எல்லையில் ஆயிரக்கணக்கான வீரா்களையும், அதிநவீன போா் விமானங்களையும் குவித்தது. ராணுவ வீரா்கள் செல்வதற்காக சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகளையும் இந்திய ராணுவம் மேற்கொண்டது. அதே நேரத்தில், எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடா்பாக சீன அரசிடம் ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் இந்தியா தொடா்ந்து பேச்சு வாா்த்தை நடத்தி வருகிறது. அதன் பலனாக, பாங்காக் பகுதியில் இருந்து இரு நாடுகளும் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டுள்ளன. இருப்பினும் வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகள் இன்னும் விலக்கிக் கொள்ளப்படவில்லை.

மேலும், கோடைக்காலம் தொடங்கியதை அடுத்து, எல்லையில் சீன தனது படைகளையும், போா் விமானங்களையும் குவிக்கத் தொடங்கியது. இந்திய விமானப் படையும் மிக்-29 ரக விமானங்கள் உள்ளிட்ட போா் விமானங்களை நிறுத்தி உள்ளது. இதுதவிர, ரஃபேல் போா் விமானங்களும் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்தச் சூழலில்தான் சீன போா் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com