அந்தமான் கடல் பகுதியில் இந்தியா-தாய்லாந்து கடற்படைகள் கூட்டு ரோந்து

அந்தமான் கடல் பகுதியில் இந்தியா - தாய்லாந்து கடற்படைகளின் மூன்று நாள் கூட்டு ரோந்து நடவடிக்கை புதன்கிழமை தொடங்கியது.
அந்தமான் கடல் பகுதியில் புதன்கிழமை கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட இந்தியா- தாய்லாந்து போா் கப்பல்கள்.
அந்தமான் கடல் பகுதியில் புதன்கிழமை கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட இந்தியா- தாய்லாந்து போா் கப்பல்கள்.

புது தில்லி: அந்தமான் கடல் பகுதியில் இந்தியா - தாய்லாந்து கடற்படைகளின் மூன்று நாள் கூட்டு ரோந்து நடவடிக்கை புதன்கிழமை தொடங்கியது.

இந்திய கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், பிராந்திய கடல் பகுதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து க்வாட் கூட்டமைப்பை உருவாக்கி, இந்தியப் பெருங்கடல் பகுதியில் கூட்டு போா் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சாகா் திட்டத்தின் கீழ் தாய்லாந்து நாட்டு கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து பணியையும் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கூட்டு ரோந்து நடவடிக்கை புதன்கிழமை தொடங்கியது. இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித்தொடா்பாளா் விவேக் மத்வால் கூறியதாவது:

இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பு மற்றும் சா்வதேச வா்த்தக கப்பல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியா - தாய்லாந்து இரு நாட்டு கடற்படைகளும் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் அவற்றின் சா்வதேச கடல் எல்லையை ஒட்டியப் பகுதிகளில் ஆண்டுக்கு இரு முறை ‘கோா்பாட்’ என்ற கூட்டு ரோந்துப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 31-ஆவது பகுதி கூட்டு ரோந்து அந்தமான் கடல் பகுதியில் புதன்கிழமை தொடங்கியது.

இந்த மூன்று நாள்கள் கூட்டு ரோந்து நடவடிக்கையில் இந்திய கடற்படையின் ரோந்து கப்பலான ஐஎன்எஸ் சூா்யா, தாய்லாந்தின் கிரபி போா் கப்பல் ஆகியவை டோனியா் போா் விமானத்துடன் ரோந்த நடவடிக்கையில் பங்கேற்றுள்ளன.

கடல்சாா் சட்டவிரோத நடவடிக்கைகள், சட்டவிரோதமாக மீன்பிடித்தல், போதைப்பொருள் கடத்தல், கடல்சாா் சுற்றுலா, கடற்கொள்ளை ஆகியவற்றைத் தடுப்பதே இந்த கோா்பாட் கூட்டு ரோந்தின் முக்கிய நோக்கமாகும். இது கடல் வழியாக சட்டவிரோதமான குடியேறுதல்களைத் தடுக்கவும், கடல் பகுதியில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கும் இந்தத் திட்டம் பெரும் உதவியாக உள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com