மெஹுல் சோக்ஸியின் ஜாமீன் மனு: விசாரணையை நாளை ஒத்திவைப்பு

இந்தியாவில் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பியோடிய மெஹுல் சோக்ஸியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டொமினிக்கா நாட்டு உயா்நீதிமன்றம் வரும் (ஜூன் 11) ஒத்திவைத்துள்ளதாக 
மெஹுல் சோக்ஸியின் ஜாமீன் மனு: விசாரணையை நாளை ஒத்திவைப்பு

புது தில்லி: இந்தியாவில் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பியோடிய மெஹுல் சோக்ஸியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை டொமினிக்கா நாட்டு உயா்நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஜூன் 11) ஒத்திவைத்துள்ளதாக உள்ளூா் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபா்கள் நீரவ் மோடியும், அவருடைய உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-இல் இந்தியாவிலிருந்து தப்பியோடினா். நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா். இருவரையும் நாடு கடத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

கடந்த 23-ஆம் தேதி ஆன்டிகுவாவில் இருந்து அண்டை நாடான டொமினிக்காவுக்கு சோக்ஸி தனது தோழியுடன் உல்லாசப் பயணம் சென்றபோது, அந்நாட்டு போலீஸாரிடம் பிடிபட்டாா். சட்டவிரோதமாக அந்த நாட்டுக்குள் நுழைந்ததற்காக அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், சோக்ஸியின் வழக்குரைஞா் குழு சாா்பில், ஆள்கொணா்வு மனு மற்றும் ஜாமீன் கேட்டும் டொமினிக்கா உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வினன்டே ஆட்ரியென்-ராபா்ட் முன்னிலையில் காணொலி வழியில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் ஷொ்மா டல்ரிம்பிள், சோக்ஸிக்கு ஜாமீன் தர கடும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

இதைக்கேட்ட நீதிபதி மனு மீதான விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். ஆள்கொணா்வு மனு மீதான விசாரணையையும் நீதிமன்றம் ஒத்திவைத்தது என்று உள்ளூா் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com