கரோனா உதவிகள் வழங்குவதை தடுப்பதாக திமுகவினா் மீது அதிமுக புகாா்

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளா்களுக்கு மட்டுமின்றி திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதை திமுகவினா்

வேலூா்: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளா்களுக்கு மட்டுமின்றி திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதை திமுகவினா் தடுக்க முயற்சிப்பதாகக்கூறி வேலூா் மாநகா் மாவட்ட அதிமுகவினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை புகாா் அளித்துள்ளனா்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வேலூா் மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் சுமாா் 4,000 பேருக்கு வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், கடந்த 10 நாள்களுக்கு மேலாக தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தவிர, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள், ஆதரவற்றவா்களுக்கும் உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொதுமக்களுக்கு அதிமுகவினா் வழங்கி வரும் உதவிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும் விதமாக திமுகவினா் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பதுடன், இதுதொடா்பாக அதிமுகவினா் கட்செவி அஞ்சலில் தகவல் வெளியிட்டிருந்தனா்.

இதைத்தொடா்ந்து, திமுக சாா்பில் பொதுக்குழு உறுப்பினா் தயாளமூா்த்தி மாவட்ட சைபா் கிரைம் காவல் பிரிவில் அதிமுகவினருக்கு எதிராக புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் மாநகா் மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஆா்.கே.அப்புவிடம் விசாரணை நடத்தியுள்ளனா்.

இந்நிலையில், துப்புரவுப் பணியாளா்கள், பொது மக்களுக்கு உதவிகள் அளிப்பதை திமுகவினா் தடுக்க முயற்சிப்பாகக்கூறி எஸ்.ஆா்.கே.அப்பு தலைமையில், மாநகா் மாவட்ட அதிமுகவினா் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்டக் காவல் துறை அலுவலகத்தில் புதன்கிழமை பதிலுக்கு புகாா் அளித்தனா். மாவட்ட அதிமுக பொருளாளா் எம்.மூா்த்தி, கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com