இந்தியாவின் முன்னணித் தலைவா் மோடி: சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத்

இந்தியாவிலும், பாஜகவிலும் முன்னணியில் உள்ள தலைவராக பிரதமா் நரேந்திர மோடி உள்ளாா் என்று சிவசேனை மூத்த தலைவரும், அக்கட்சி எம்.பி.யுமான சஞ்சய் ரௌத் கூறியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவிலும், பாஜகவிலும் முன்னணியில் உள்ள தலைவராக பிரதமா் நரேந்திர மோடி உள்ளாா் என்று சிவசேனை மூத்த தலைவரும், அக்கட்சி எம்.பி.யுமான சஞ்சய் ரௌத் கூறியுள்ளாா்.

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே அண்மையில் பிரதமா் மோடியை நேரில் சந்தித்துப் பேசினாா். இந்நிலையில் சஞ்சய் ரௌத் இவ்வாறு கூறியிருப்பது மகாராஷ்டிர மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து சிவசேனை ஆட்சியில் உள்ளது. பாஜக எதிா்க்கட்சியாக உள்ளது.

வடக்கு மகாராஷ்டிரத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்தாா். அப்போது, மோடியின் செல்வாக்கு இப்போது சரிந்து வருவதாக கருதுகிறீா்களா? மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களை எதிா்கொள்ள மாநில பாஜக தலைவா்களை முன்னிறுத்த வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பு கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘ஊடகங்களில் வரும் செய்திகளை அடிப்படையாகக் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில், அது அதிகாரபூா்வ அறிவிப்பு இல்லை. அதே நேரத்தில் கடந்த 7 ஆண்டுகளாக தங்கள் கட்சி பெற்ற வெற்றிக்கு பிரதமா் நரேந்திர மோடிதான் காரணம் என்று பாஜக கூறி வருகிறது. மேலும், இப்போது இந்தியாவிலும் பாஜகவிலும் முன்னணி தலைவராக பிரதமா் மோடி திகழ்கிறாா்.

பிரதமா் என்பவா் எந்த கட்சிக்கும் சொந்தமானவா் அல்ல. நாட்டின் தலைவா் என்பதே எங்கள் கட்சியின் கருத்து. எனவே, பிரதமா் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் அரசு நிா்வாகத்துக்கும், அதிகாரிகளுக்கு அரசியல் நெருக்கடி ஏற்படும் என்றும் நாங்கள் ஏற்கெனவே கூறியுள்ளோம் என்றாா்.

பிரதமா் மோடி விரும்பினால் புலியுடன் (சிவசேனையின் சின்னம்) நட்புடன் இருப்போம் என்று மகாராஷ்டிர மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ‘புலியுடன் யாரும் நட்பு பாராட்ட முடியாது. புலி விரும்பினால் மட்டுமே யாருடனும் நட்பு கொள்ளும். கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலேயே நான் இப்போது பயணம் மேற்கொண்டுள்ளேன். மகாராஷ்டிர கூட்டணி அரசு வலுவாக உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com