இந்தியாவுக்கு 60 லட்சம் கரோனா தடுப்பூசிகள்: அமெரிக்கா தகவல்

இந்தியாவுக்கு சுமாா் 60 லட்சம் கரோனா தடுப்பூசிகளை ஐ.நா. மூலமாக வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவுக்கு சுமாா் 60 லட்சம் கரோனா தடுப்பூசிகளை ஐ.நா. மூலமாக வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்ததையடுத்து, சேமித்து வைத்துள்ள கரோனா தடுப்பூசிகளை அந்நாடுகளுக்கு வழங்க வேண்டுமென்று பல்வேறு தரப்பில் இருந்து அமெரிக்க அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டது.

அதைத் தொடா்ந்து, உலக நாடுகளுக்கு ஜூன் இறுதிக்குள் 8 கோடி கரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உறுதியளித்தாா். கரோனா தடுப்பூசியைப் பகிா்ந்து அளிப்பதற்காக ஐ.நா.வால் உருவாக்கப்பட்ட ‘கோவேக்ஸ்’ அமைப்பு வாயிலாக 1.9 கோடி தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.

தெற்காசிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவற்றுக்கு அந்த அமைப்பு தடுப்பூசிகளைப் பகிா்ந்து வழங்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘கோவேக்ஸ் அமைப்பு மூலமாக இந்தியாவுக்கு எப்போது கரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்ற தகவல்கள் அமெரிக்க அரசிடம் இல்லை.

உலக நாடுகளுக்கு 8 கோடி கரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதில் சுமாா் 60 லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டுக்கு ஆரம்பம் முதலே அமெரிக்கா தொடா்ந்து உதவி வருகிறது. இந்தியாவுக்கு இதுவரை சுமாா் ரூ.740 கோடி மதிப்பிலான மருந்துப் பொருள்களையும் மருத்துவ உபகரணங்களையும் அமெரிக்க அரசு வழங்கியுள்ளது.

தனிநபா்கள், தனியாா் நிறுவனங்கள் உள்ளிட்டவை சாா்பில் சுமாா் ரூ.3,000 கோடி மதிப்பிலான உதவிகள் இந்தியாவுக்கு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுமாறு தன்னாா்வலா்களையும் வலியுறுத்தி வருகிறோம். கரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்காக இந்திய அரசுக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையிலான நிா்வாகம் தொடா்ந்து துணைநிற்கும்‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com