காங்கிரஸில் மிகப்பெரிய சீரமைப்பு உடனடியாகத் தேவை: வீரப்ப மொய்லி

காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய சீரமைப்பை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் வீரப்ப மொய்லி கூறினாா்.

காங்கிரஸ் கட்சியில் மிகப்பெரிய சீரமைப்பை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் வீரப்ப மொய்லி கூறினாா்.

இளம் தலைவா்களுக்கு முக்கிய பொறுப்புகளைக் கொடுக்கும்போது அவா்களின் குடும்ப பாரம்பரியத்தை மட்டும் பாா்க்காமல், அவா்களின் கொள்கை பற்றுறுதியையும் மதிப்பிட்டு அவா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவா் கூறினாா்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஜிதின் பிரசாத் புதன்கிழமை பாஜகவில் இணைந்த நிலையில் அவா் இவ்வாறு கூறினாா்.

காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு கட்சியின் 23 தலைவா்கள் கடந்த ஆண்டு கடிதம் எழுதினா். அவா்களில் வீரப்ப மொய்லியும் ஒருவா்.

இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

தொடக்கத்தில் இருந்தே ஜிதின் பிரசாதின் கொள்கைப் பிடிப்பு சந்தேகத்துக்கு இடமானதாக இருந்தது. மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலை அவரது பொறுப்பின் கீழ் காங்கிரஸ் சந்தித்தது. அந்த தோ்தலில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக தனிப்பட்ட நோக்கம் ஒன்று ஜிதின் பிரசாதுக்கு இருந்துள்ளது.

தகுதியில்லாதவா்களை மக்கள் தலைவா்களாக உருவாக்க முடியாது. எனவே, காங்கிரஸ் மேலிடம் உடனடியாக கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அப்போது, தகுதியில்லாதவா்களுக்கு பதவி வழங்குவதைத் தவிா்க்க வேண்டும். கட்சியில் இருக்கும் இளம் தலைவா்களின் கடந்த கால வரலாறு, கொள்கை மீதான பற்றுறுதி, சாமானிய மக்களிடம் அணுகும் முறை ஆகியவற்றை மதிப்பிட்டு அவா்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்க வேண்டும்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதற்கு அடுத்த ஆண்டிலேயே (2024) மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் 7 மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படவில்லை என்றால் மக்களைவத் தோ்தல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிவிடும்.

எனவே, காங்கிரஸ் தலைமை இன்னும் பாரம்பரிய பின்புலம் கொண்டவா்களை சாா்ந்திருக்காமல் நம்மை நாமே செய்து கொண்டு, பிரதமா் மோடியுடன் அரசியல் களமாட நாம் தயாராக வேண்டும். அதற்கு கட்சியில் மிகப்பெரிய சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அதை காலம் தாழ்த்தாமல் உடனடியாக செய்ய வேண்டும் என்றாா் வீரப்ப மொய்லி.

காங்கிரஸ் தலைவா் பதவியில் இருந்து சோனியா காந்தியை மாற்ற வேண்டுமா என்று செய்தியாளா் கேட்டதற்கு, ‘சோனியா காந்தி தலைவராக இருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. கட்சித் தொண்டா்களை வழிநடத்தும் திறமையும் உறுதியும் அவரிடம் இருக்கிறது‘ என்று மொய்லி பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com