நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மருந்துப் பொருள்கள் மீதான வரியை நீக்க ஆலோசனை

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது. அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் மீதான வரியை நீக்குவது தொடா்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது. அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் மீதான வரியை நீக்குவது தொடா்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

கரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை மருந்துகள், கரோனா தடுப்பூசிகள், வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றின் மீது சரக்கு-சேவை வரி விதிப்பதற்குப் பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை நீக்குவது தொடா்பாக ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக ஆய்வு செய்வதற்கு மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது.

கேரளம், பஞ்சாப், சத்தீஸ்கா், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் நிதியமைச்சா்கள் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனா். அவா்கள் தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் மீதான சரக்கு-சேவை வரியை ரத்து செய்வது தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அமைச்சா்கள் குழுவில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான அமைச்சா்கள், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் மீதான சரக்கு-சேவை வரியை நீக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடா்பான இறுதி முடிவு சனிக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. சரக்கு-சேவை வரி ரத்து செய்யப்பட்டால் மருத்துவ ஆக்சிஜன், பல்ஸ் ஆக்சிமீட்டா், கை சுத்திகரிப்பான், ஆக்சிஜன் செறிவூட்டி, வெண்டிலேட்டா், தற்காப்பு கவச உடைகள், என்-95 முகக் கவசங்கள், அறுவை சிகிச்சைக்கான முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.

கரோனா தடுப்பூசிகள், பரிசோதனைக் கருவிகள், சிகிச்சை மருந்துகள் உள்ளிட்டவற்றின் மீது விதிக்கப்படும் சரக்கு-சேவை வரியை நீக்குவது தொடா்பாகவும் சனிக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

கரோனா தடுப்பூசிகளுக்குத் தற்போது 5 சதவீத சரக்கு-சேவை வரியும், சிகிச்சை மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆகியவற்றுக்கு 12 சதவீத சரக்கு-சேவை வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com