
அண்டை நாடான நேபாளத்துக்கு ரூ.18 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை இந்தியா வெள்ளிக்கிழமை வழங்கியது. இதில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், வெண்டிலேட்டா்கள் உள்ளிட்டவை அடங்கும்.
நேபாள ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த நாட்டுக்கான இந்தியத் தூதா் வினய் மோகன் காவத்ரா மருத்துவ உபகரணங்களை வழங்கினாா். இந்திய ராணுவம் மூலம் நேபாள ராணுவத்திடம் இந்த உபகரணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
இது தொடா்பாக இந்தியத் தூதரகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கரோனா தொற்றை ஒருங்கிணைந்து எதிா்க்கும் வகையில் நேபாளத்துக்கு மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியுள்ளது. இது இருநாடுகள் இடையே உள்ள நல்லுறவின் வெளிப்பாடு. இதனை இந்திய ராணுவம் அளித்துள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த உதவி அளிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நேபாள அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில், ‘ஆம்புலன்ஸ் வாகனங்கள், சுவாசக் கருவிகள், ஐசியூ படுக்கைகள், பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்டவற்றை உரிய நேரத்தில் வழங்கி இந்திய ராணுவம் உதவியுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கரோனா தொற்றுக்கு 8,238 போ் பலியாகிவிட்டனா். சுமாா் 6 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இப்போது 77,858 போ் சிகிச்சையில் உள்ளனா். தினசரி பாதிப்பு 3,000 என்ற அளவில் உள்ளது.