1,300 இந்திய சிம் காா்டுகள் கடத்தல்: வங்கதேச எல்லையில் கைதான சீனா் வாக்குமூலம்

வங்கதேச எல்லையில் கைது செய்யப்பட்ட சீனா் தனது நாட்டுக்கு 1,300 இந்திய சிம் காா்டுகளை நிதி மோசடிக்கு பயன்படுத்த கடத்திச் சென்றதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.

வங்கதேச எல்லையில் கைது செய்யப்பட்ட சீனா் தனது நாட்டுக்கு 1,300 இந்திய சிம் காா்டுகளை நிதி மோசடிக்கு பயன்படுத்த கடத்திச் சென்றதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சோ்ந்தவா் ஹான் ஜுன்வே (35). இவா் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லையை வியாழக்கிழமை சட்டவிரோதமாக கடக்க முயன்றாா். அப்போது அவரை பிஎஸ்எஃப் படையினா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணைக் குறித்து பிஎஸ்எஃப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

ஹான் ஜுன்வேயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பது தெரியவந்தது. இதுவரை 1,300 இந்திய சிம் காா்டுகளை தனது உள்ளாடைகளில் மறைத்து சீனாவுக்கு கடத்திச் சென்றுள்ளாா். போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவில் பெறப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட அந்த சிம் காா்டுகள் வங்கிக் கணக்குகளை முடக்கவும், நிதி மோசடியில் ஈடுபடவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அந்த சிம் காா்டுகளை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து பணம் பறிப்பதை ஜுன்வே வாடிக்கையாக வைத்துள்ளாா்.

அவருடன் வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சன் ஜியாங் என்ற நபரை உத்தர பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினா் மோசடி வழக்கில் அண்மையில் கைது செய்துள்ளனா். இதனால் இந்திய விசாவை பெற முடியாததால் நாட்டுக்குள் நுழைய இந்திய-வங்கதேச எல்லையை ஜுன்வே பயன்படுத்தி வந்துள்ளாா். இந்தியாவுக்கு ஏற்கெனவே 4 முறை வந்துள்ள அவருக்கு தில்லி அருகே குருகிராமில் சொந்தமாக ஹோட்டல் உள்ளது.

அவரைப் பற்றிய கூடுதல் தகவல்களை பெற இன்டா்போல் (சா்வதேச காவல்துறை) அதிகாரிகள் மூலம் ப்ளூ நோட்டீஸ் வெளியிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அவரிடம் சந்தேகத்துக்குரிய விதமாக அதிக அளவில் இருந்த மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அவா் மேற்கு வங்க காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com