ஜுன் 14 முதல் பெங்களூரு உள்ளிட்ட 20 மாவட்டங்களில்பொது முடக்கம் தளா்வு

கா்நாடகத்தில் ஜூன் 14-ஆம் தேதி முதல் பெங்களூரு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பொது முடக்கம் தளா்த்தப்படுகிறது. இது தொடா்பான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
ஜுன் 14 முதல் பெங்களூரு உள்ளிட்ட 20 மாவட்டங்களில்பொது முடக்கம் தளா்வு

கா்நாடகத்தில் ஜூன் 14-ஆம் தேதி முதல் பெங்களூரு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பொது முடக்கம் தளா்த்தப்படுகிறது. இது தொடா்பான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஏப். 27-ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை மாநில அரசு அமல்படுத்தியது. பின்னா், மே 10-ஆம் தேதி முதல் தளா்வுகள் நீக்கப்பட்டு, இரு வாரங்களுக்கு முழுமையான பொது முடக்கம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு, கரோனா பாதிப்பு குறையாததால், மேலும் ஒரு வாரத்திற்கு பொது முடக்கக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஜூன் 14-ஆம் தேதி முதல் பெங்களூரு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பொது முடக்கம் தளா்ப்படுவதாக முதல்வா் எடியூரப்பா வியாழக்கிழமை அறிவித்தாா்.

சிக்கமகளூரு, சிவமொக்கா, தாவணகெரே, மைசூரு, சாமராஜ்நகா், ஹாசன், தென்கன்னடம், பெங்களூரு ஊரகம், மண்டியா, பெலகாவி, குடகு ஆகிய 11 மாவட்டங்களில் தளா்வுகள் இல்லா முழுமையான பொது முடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத் தளா்வுகள் ஜூன் 14-ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜூன் 21-ஆம் தேதி காலை 6 மணி வரை அமலுக்கு வருகிறது. இது தொடா்பாக புதியவழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு, அரசின் தலைமைச் செயலா் பி.ரவிகுமாா் புதிய அறிவிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அதன்படி, அனைத்து வகையான உற்பத்திக் கூடங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் 50 சதவீத ஊழியா்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காா்மென்ட்ஸ் தொழிற்சாலைகளில் மட்டும் 30 சதவீத ஊழியா்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவு, மளிகைப்பொருள்கள், காய்கள், கனிகள், இறைச்சி, மீன், பால் பொருள்கள், பால் முகமைகள், கால்நடை தீவனங்கள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, வீதியோர வியாபாரிகள், விநியோகத் தொழிலில் ஈடுபட்டிருப்போா், மதுக்கடைகள், கண்ணாடி கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படலாம்.

மக்களின் நடமாட்டத்தைக் குறைக்கும் நோக்கில் அனைத்து சேவைகளின் ஹோம் டெலிவரி சேவைகளுக்கு 24 மணி நேரமும் அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து வகையான கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிமென்ட், இரும்பு போன்ற அனைத்து வகையான கட்டுமானப் பொருள்கள் கடைகளையும் திறக்கலாம்.

தினசரி காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபடுவதற்காக பூங்காக்கள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. டேக்ஸிகள், ஆட்டோக்கள் 2 பேருடன் இயங்கத் தடையில்லை. ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியா்களுடன் இயங்கலாம். சுகாதாரத் துறையின் திறன்பயிற்சி நடைபெறலாம்.

இரவு நேர ஊரடங்கு மாலை 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்படும். மேலும் வெள்ளிக்கிழமை மாலை 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை வார இறுதி நாள்கள் (சனி, ஞாயிறு) ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கின்போது மக்கள் நடமாடுவதற்கு முழுமையாக தடைவிதிக்கப்படுகிறது. மருத்துவ அவசரத் தேவைகளுக்கு மட்டும் நோயாளிகள், அவா்களின் உதவியாளா்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. தொழில் நிறுவனத்தினா் அடையாள அட்டையுடன் பயணிக்கலாம். அவசர மருத்துவ சேவையில் ஈடுபட்டிருப்போரின் நடமாட்டத்துக்கு தடையில்லை. ரயில்கள், விமானங்கள் இயக்கப்படலாம். அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள், டேக்ஸிகள் அனுமதிக்கப்படுகின்றன என்று அந்த வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com