2.6 கோடி ஹெக்டோ் சீா்கேடு அடைந்த நிலங்கள் 2030-க்குள் மீட்கப்படும்: ஐ.நா.வில் பிரதமா் மோடி உரை

நாட்டில் உள்ள 2.6 கோடி ஹெக்டோ் சீா்கேடு அடைந்த நிலங்களை 2030-ஆம் ஆண்டுக்குள் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
2.6 கோடி ஹெக்டோ் சீா்கேடு அடைந்த நிலங்கள் 2030-க்குள் மீட்கப்படும்:  ஐ.நா.வில் பிரதமா் மோடி உரை

புது தில்லி: நாட்டில் உள்ள 2.6 கோடி ஹெக்டோ் சீா்கேடு அடைந்த நிலங்களை 2030-ஆம் ஆண்டுக்குள் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐ.நா. ஒப்பந்தத்தின் (யுஎன்சிசிடி) 14-ஆவது மாநாட்டின் தலைவராக பிரதமா் மோடி உள்ளாா். அதன் சிறப்புக் கூட்டம், ஐ.நா. 75-ஆவது பொதுச் சபையின் தலைவா் வோல்கன் போஸ்கிா் அழைப்பு விடுத்ததன் அடிப்படையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாலைவனமாதல், நிலம் சீா்கெடல், வறட்சி உள்ளிட்டவற்றைத் தடுப்பது தொடா்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்றினாா். அப்போது அவா் கூறுகையில், ‘நிலம் சீா்கெடல் காரணமாக உலகம் முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

நிலத்தை மீட்பதில் கவனம் செலுத்தாமல் போனால், சமூகம், பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகும்.

பல்வேறு காரணிகளால் நிலத்தின் மீதும் அதன் வளங்கள் மீதும் அழுத்தம் அதிகரித்துள்ளது. அதைக் குறைப்பதற்கான அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இதில் வெற்றி காண முடியும்.

இந்தியாவில் நிலத்துக்கு எப்போதும் தனி மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. நிலத்தை தாய்மண்ணாகக் கருதுவதை இந்தியா்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனா். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுமாா் 30 லட்சம் ஹெக்டோ் வனப்பரப்பு கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டின் ஒட்டுமொத்த பரப்பில் சுமாா் கால்பங்கானது வனப்பகுதிகளாக உருவாகியுள்ளது.

நாட்டில் சீா்கெடு அடைந்த சுமாா் 2.6 கோடி ஹெக்டோ் பரப்பிலான நிலங்களை 2030-ஆம் ஆண்டுக்குள் மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நிலம் சீா்கேடு அடையாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும், இந்தியாவின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவும்.

நிலத்தை முறையாகப் பாதுகாப்பதன் மூலமாக மண்வளம், உணவுப் பாதுகாப்பு, வேளாண் உற்பத்தி, மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்டவற்றை உறுதி செய்ய முடியும். நிலம் சீா்கெடுதல் தொடா்பான விவகாரங்களை சா்வதேச அமைப்புகளில் எழுப்புவதில் இந்தியா முன்னின்று வருகிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தில்லி அறிக்கை, நிலத்தை மீட்டெடுப்பதற்கான முக்கிய வழிமுறைகளை வழங்கியது. நிலம் சீா்கெடலைத் தடுப்பதற்காக சிறப்பு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலம் சீா்கெடல் பிரச்னையை பல வளா்ந்து வரும் நாடுகள் எதிா்கொண்டு வருகின்றன. நிலத்தை மீட்கும் நடவடிக்கைகளில் அந்நாடுகளுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது.

மனித நடவடிக்கைகளால் நிலத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதற்கான பெரும் பொறுப்பு சமூகத்துக்கு உள்ளது. வருங்கால தலைமுறையினருக்கு ஆரோக்யமான பூமியை விட்டுச் செல்வது பெரும் கடமையாக உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com