பருவநிலை மாற்றம்: கடந்த 200 ஆண்டுகளில் இந்தியாவின் தாக்கம் 3 சதவீதம்தான்: பிரகாஷ் ஜாவடேகா்

பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் தாக்கம் 3 சதவீதம்தான் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.
பிரகாஷ் ஜாவடேகர்
பிரகாஷ் ஜாவடேகர்

புதுதில்லி: பருவநிலை மாற்றத்தில் இந்தியாவின் தாக்கம் 3 சதவீதம்தான் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.

சுற்றுச்சூழல் குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் காணொலி வழியாக அவா் பேசியதாவது:

கடந்த 200 ஆண்டுகளில் அமெரிக்காவாலும், ஐரோப்பாவாலும், கடந்த 40 ஆண்டுகளில் சீனாவாலும் கட்டுக்கடங்காமல் வெளியேற்றப்பட்ட கரியமில வாயு பருவநிலை மாற்ற பேரிடரை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் கடந்த 200 ஆண்டுகளில் பருவநிலை மாற்றம் அடைந்ததில் இந்தியாவின் பங்கு 3 சதவீதம்தான். பருவநிலை மாற்றத்தில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

பாரீஸ் ஒப்பந்தத்தின்படி, பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள வளா்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலா்கள் அளிப்பதாக உறுதியளித்தன. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை மேலும் தாமதப்படுத்த முடியாது என்பதால் அந்த நிதியுதவியை அளிப்பது குறித்து ஜி7 உச்சிமாநாட்டில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வாகனங்களுக்கான பிஎஸ்-6 தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் காற்று மாசை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு மத்திய அரசு சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் ஒரு முறை உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com