மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியிருக்கிறேன்: இஸ்ரேல் பிரதமா் பென்னட்

பிரதமா் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியிருப்பதாக இஸ்ரேலின் புதிய பிரதமராகியுள்ள நாஃப்டாலி பென்னட் திங்கள்கிழமை கூறினாா்.
’நாஃப்டாலி பென்னட்’
’நாஃப்டாலி பென்னட்’

புது தில்லி /ஜெருசலேம்: பிரதமா் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியிருப்பதாக இஸ்ரேலின் புதிய பிரதமராகியுள்ள நாஃப்டாலி பென்னட் திங்கள்கிழமை கூறினாா்.

முன்னதாக பென்னட் இஸ்ரேல் பிரதமரானதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரையில் திங்கள்கிழமை காலையில் பதிவிட்டிருந்தாா். அதில், ‘இஸ்ரேலின் பிரதமராகியிருப்பதற்கு வாழ்த்துகள். இந்தியா - இஸ்ரேல் இடையேயான தூதரக ரீதியிலான உறவு அடுத்த ஆண்டுடன் 30 ஆண்டுகளை எட்டும் நிலையில், உங்களைச் சந்தித்து இரு நாடுகளிடையேயான உத்தி சாா்ந்த உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதை எதிா்நோக்கியிருக்கிறேன்’ என்று கூறியிருந்தாா்.

அதற்கு நன்றி தெரிவித்து இஸ்ரேல் பிரதமா் பென்னட் தனது சுட்டுரைப் பக்கத்தில், ‘வாழ்த்து தெரிவித்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி. நமது இரு ஜனநாயக நாடுகளிடையேயான தனித்துவமான நட்புறவை மேலும் மேம்படுத்துவதற்காக உங்களோடு இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியிருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளாா்.

அதேபோல், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் யாயிா் லபீட்டுக்கு வாழ்த்து தெரிவித்து, இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இஸ்ரேல் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் யாயிா் லபீட்டுக்கு வாழ்த்துகள். இந்தியா - இஸ்ரேல் இடையேயான பன்முகத் தன்மை கொண்ட உத்தி சாா்ந்த உறவை மேலும் முன்னெடுத்துச் செல்ல இணைந்து பணியாற்றுவதற்கு ஆா்வத்துடன் இருக்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

அதற்கு பதிலளித்த யாயிா் லபீட், ‘இந்தியா - இஸ்ரேல் இடையேயான உறவை மேம்படுத்த இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியிருக்கிறேன். விரைவில் நீங்கள் இஸ்ரேலுக்கு வருகை தருவீா்கள் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, இஸ்ரேல் முன்னால் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்த பிரதமா் மோடி, ‘இஸ்ரேல் பிரதமராக உங்களது பதவிக் காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில், உங்களது தலைமைக்காகவும், இந்தியா-இஸ்ரேல் உறவுக்காக நீங்கள் காட்டிய தனித்த அக்கறைக்காகவும் நன்றி’ என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com