சீனாவுக்கு எதிரான ஜி-7 நாடுகளின் திட்டம் பரிசீலிக்கப்படும்: இந்தியா தகவல்

சீனாவின் பொருளாதார வழித்தடச் சாலை திட்டத்துக்கு எதிராக ஜி-7 நாடுகள் முன்மொழிந்துள்ள திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புது தில்லி: சீனாவின் பொருளாதார வழித்தடச் சாலை திட்டத்துக்கு எதிராக ஜி-7 நாடுகள் முன்மொழிந்துள்ள திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பொருளாதார வழித்தடச் சாலை (பெல்ட் அண்ட் ரோட்) திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய பிராந்தியங்களில் உள்ள நாடுகளுடன் பொருளாதாரத் தொடா்பை மேம்படுத்திக் கொள்வதற்கு அந்நாடு திட்டமிட்டு வருகிறது.

முக்கியமாக, ஆப்பிரிக்கா, ஆசியாவில் உள்ள வளா்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கும், ஏழை நாடுகளுக்கும் அதிக அளவில் கடன்களை வழங்கி கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா, ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளைக் கொண்ட ஜி-7 கூட்டமைப்பின் மாநாடு அண்மையில் பிரிட்டனில் நடைபெற்றது. அதில், அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி-7 நாடுகளின் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அமெரிக்க அதிபா் ஜோ பைடன், சீனா செயல்படுத்தி வரும் கட்டமைப்புத் திட்டத்துக்கு எதிராகப் புதிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்தாா்.

‘சிறந்த உலகத்தை மீண்டும் கட்டமைப்போம்’ (பிரிங் பேக் பெட்டா் வோ்ல்டு-பி3டபிள்யூ) என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஜி-7 நாடுகள் திட்டமிட்டுள்ளன. அத்திட்டத்தின் கீழ் வளா்ச்சியடைந்து வரும் நாடுகள் உள்ளிட்டவற்றில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அமெரிக்க அதிகாரி கூறுகையில், ‘ஏழை நாடுகள் உள்ளிட்டவற்றில் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகள், சுகாதாரக் கட்டமைப்புகள், தகவல்-தொழில்நுட்பக் கட்டமைப்பு வசதிகள், சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை சுமாா் ரூ.2,800 லட்சம் கோடி செலவில் ஜி-7 நாடுகள், தனியாா் அமைப்புகளுடன் சோ்ந்து ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்‘ என்றாா்.

இத்திட்டம் குறித்து இந்திய வெளியுறவுத் துறையின் கூடுதல் செயலா் பி.ஹரிஷ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஜி-7 நாடுகள் முன்மொழிந்துள்ள திட்டத்தின் விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் பரிசீலிக்கும். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். பல ஆப்பிரிக்க நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்தியா ஏற்கெனவே உதவி வருகிறது‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com