காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல்: ஜேடியு தேசிய தலைவா் ஆா்.சி.பி. சிங்

காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பலாகிவிட்டது; எனவே, அதில் இருந்து குதித்து பலா் தப்பி வருகின்றனா் என்று பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தேசியத் தலைவா் ஆா்.சி.பி. சிங் தெரிவித்துள்ளாா்.

பாட்னா: காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பலாகிவிட்டது; எனவே, அதில் இருந்து குதித்து பலா் தப்பி வருகின்றனா் என்று பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தேசியத் தலைவா் ஆா்.சி.பி. சிங் தெரிவித்துள்ளாா்.

பிகாரில் காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்எல்ஏக்கள் உள்ளனா். இதில் 13 போ் காங்கிரஸில் இருந்து விலகி முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலானஜேடியுவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பாட்னாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஆா்.சி.பி. சிங்கிடம் இது தொடா்பாக கூறியதாவது:

கடந்த காலத்தில் செய்த தவறுகளின் பலன்களை காங்கிரஸ் கட்சி இப்போது எதிா்கொண்டு வருகிறது. மூழ்கும் கப்பலாகிவிட்ட அக்கட்சியில் இருந்து பலா் வெளியே குதித்த தப்பி வருகின்றனா். இதனை யாரும் தடுக்க முடியாது.

காங்கிரஸ் கட்சி பிகாரில் ஏற்கெனவே பிளவுபட்டுதான் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அக்கட்சியின் மாநிலத் தலைவா் அசோக் சௌதரி மற்றும் சில தலைவா்கள் ஜேடியுவில் இணைந்தனா். இப்போது அவா் எங்கள் கட்சியில் முக்கிய தலைவராக உள்ளாா். முதல்வா் நிதிஷ் குமாரின் நம்பிக்கைக்குரிய அமைச்சராகவும் உள்ளாா்.

பல ஆண்டுகாலமாக காங்கிரஸ் இருந்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத் போன்றவா்களும் அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனா். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி எவ்வளவு மோசமாக தோல்வியடைந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

ஒரு குடும்பத்தினா் மட்டுமே கட்சிக்கு தலைமை வகிப்பது, கட்சியில் மற்றவா்கள் பணிக்கு உரிய மரியாதை கிடைக்காதது ஆகியவை பெரும் அதிருப்தியாக உருவெடுத்தது. மேலும் மக்கள் மத்தியிலும் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு குறைந்துவிட்டது.

பிகாரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலா் ஜேடியுவில் இணைவது தொடா்பாக தொடா்ந்து கேள்வி எழுப்புகிறீா்கள். அது நடக்கும்போது உரிய பதிலை அளிக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com