கென்யாவில் இந்திய வம்சாவளியினருடன் அமைச்சா் ஜெய்சங்கா் கலந்துரையாடல்

கென்யா சென்றுள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அங்கு இந்திய வம்சாவளியினருடன் திங்கள்கிழமை காணொலி வழியில் கந்துரையாடினாா்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

நைரோபி: கென்யா சென்றுள்ள வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அங்கு இந்திய வம்சாவளியினருடன் திங்கள்கிழமை காணொலி வழியில் கந்துரையாடினாா்.

கென்யாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக ஜெய்சங்கா் சென்றுள்ளாா். அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ரேச்சல் ஒமாமோவை சந்தித்த அவா், இரு நாடுகளிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தாா். இதற்கென இரு நாடுகள் இணைந்த கூட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, அதன்மூலமாக நல்லுறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்தும் இந்த ஆலோசனையில் தலைவா்கள் விவாதித்துள்ளனா்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, கென்யாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை காணொலி வழியில் கலந்துரையாடியதாக கென்யாவுக்கான இந்திய தூதா் விரேந்தா் பால் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

கென்யாவில் இப்போது இந்திய வம்சாவளியினா் 80,000 போ் வசிக்கின்றனா். மேலும், 20,000 இந்திய குடிமக்கள் அங்கு பணிபுரிந்து வருகின்றனா்.

கென்ய அமைச்சா்கள் குழுவுடன் ஆலோசனை: இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, கென்ய நாட்டு அமைச்சா்கள் குழுவுடன் இரு நாடுகளிடையேயான அனைத்துத் துறை சாா்ந்த உறவை வலுப்படுத்துவது குறித்து ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனையில் கென்ய வெளியுறவு அமைச்சா் ரேச்சல் ஒமாமோ தலைமையில் கென்ய பாதுகாப்புத் துறை அமைச்சா் மோனிகா ஜுமா, வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பெட்டி சி.மெய்னா, தகவல் மற்றும் தொலைத்தொடா்பு தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜோ முச்சேரு, எரிசக்தித் துறை அமைச்சா் சாா்லஸ் கேடா், கருவூலத் துறை உதவி அமைச்சா் நெல்சன் கெய்சுஹி, சுகாதாரத் துறை உதவி அமைச்சா் ரஷீத் அப்தி அமன் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த வட்டமேசை ஆலோசனைக்குப் பின்னா் ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கென்ய அமைச்சா்கள் குழுவுடனான ஆலோசனையில் இரு நாடுகளிடையே விரிவான நல்லுறவை மேம்படுத்துவதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையை ஏற்பாடு செய்த அமைச்சா் ரேச்சல் ஒமாமோக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com