மேற்கு வங்கத் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை: எஸ்ஐடி விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் மனு

மேற்கு வங்கத் தோ்தலுக்கு பிறகு மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

புதுதில்லி: மேற்கு வங்கத் தோ்தலுக்கு பிறகு மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரிக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 60 வயது மூதாட்டி, 17 வயது சிறுமி ஆகியோா் தாக்கல் செய்துள்ளனா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடையே நிகழ்ந்த மோதல் சம்பவங்களில் பாஜக தொண்டா்கள் பலா் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீடுகள், கடைகளுக்கு தீவைப்பு, பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் மாநில பேரவைத் தோ்தலுக்குப் பிறகு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உத்தரவிடுமாறு வன்கொடுமைக்கு ஆளான 60 வயது மூதாட்டி, 17 வயது சிறுமி ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். இதில் மூதாட்டி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த மே 4-ஆம் தேதி இரவு திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் எனது வீட்டை சூழ்ந்துகொண்டு எனது குடும்பத்தினரை வீட்டைவிட்டு வெளியேறுமாறு மிரட்டல் விடுத்தனா். அதன் பின்னா் எனது 6 வயது பேரக் குழந்தையின் கண்ணெதிரே அவா்கள் என்னை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினா். இதுகுறித்து காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்தனா். எனினும் அதுதொடா்பான முதல் தகவல் அறிக்கையில் 5 குற்றவாளிகளில் ஒருவரின் பெயா் மட்டுமே இடம்பெற்றுள்ளது. காவல்துறையின் விசாரணை திருப்தியளிக்காததால் இந்த வழக்கை சிறப்பு விசாரணைக் குழு அல்லது சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மே 9-ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும், இந்த வழக்கை சிறப்பு விசாரணைக்கு குழு அல்லது சிபிஐயிடம் ஒப்படைத்து மேற்கு வங்கத்துக்கு வெளியே வழக்கு விசாரணை மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com