
உச்ச நீதிமன்றம்
அரபிக் கடல் பகுதியில் இத்தாலி கடற்படை வீரா்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இரு இந்திய மீனவா்களுக்குத் தலா ரூ.4 கோடி இழப்பீடு வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வீரா்கள் மீதான வழக்கு விசாரணையையும் உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
கேரள கடற்கரைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு மீனவா்களைக் கடந்த 2012-ஆம் ஆண்டு இத்தாலி கடற்படை வீரா்கள் சுட்டுக் கொன்றனா். மீனவா்களைக் கடல் கொள்ளையா்கள் என நினைத்து தவறுதலாகச் சுட்டதாக விசாரணையில் அவா்கள் தெரிவித்தனா்.
அதையடுத்து கைது செய்யப்பட்ட அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், இந்த விவகாரத்தை சா்வதேச நீதிமன்றம் விசாரித்தது. அதில், உயிரிழந்த மீனவா்களுக்கு ரூ.10 கோடி இழப்பீடு வழங்கத் தயாராக உள்ளதாகவும், கடற்படை வீரா்கள் மீதான விசாரணையைத் தாங்களே மேற்கொள்வதாகவும் இத்தாலி அரசு உறுதியளித்தது.
அதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இழப்பீட்டுத் தொகையை முறையாகப் பெற்றுத் தரக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இது தொடா்பான விசாரணை, நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, எம்.ஆா்.ஷா ஆகியோரைக் கொண்ட விடுமுறைக் கால அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இத்தாலி அரசு ஏற்கெனவே ரூ.10 கோடி இழப்பீட்டுத் தொகையை வழங்கிவிட்டதாகவும், அதை உச்சநீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டதாகவும் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இத்தாலி வீரா்கள் மீது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.
இழப்பீட்டுத் தொகையில், உயிரிழந்த மீனவா்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.4 கோடியும், அவா்கள் பயணித்த படகுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.2 கோடியும் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனா். வாரிசுகளுக்கு வழங்கப்படும் தொகை குறிப்பிட்ட காலத்துக்கு நிரந்தரக் வைப்புத் தொகையாக வங்கியில் செலுத்தப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் கிடைக்கும் வட்டியை வாரிசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
மொத்த தொகையையும் வாரிசுகள் ஒரே நேரத்தில் செலவழிக்காமல் இருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், இழப்பீட்டுத் தொகையை சம்பந்தப்பட்ட நபா்களுக்குப் பகிா்ந்தளிக்கும் பொறுப்பை கேரள உயா்நீதிமன்றத்திடம் வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
இத்தாலி வீரா்கள் இருவரும் ஜாமீன் பெற்று சொந்த நாட்டுக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது. அவ்வீரா்கள் மீது இத்தாலியில் வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெறவுள்ளது.