பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங் பெங்களூா் வருகை:கட்சிக்குள் நிலவும் குழப்பத்துக்கு தீா்வு காண முயற்சி

பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங் பெங்களூருக்கு வருகை தந்துள்ளாா். கா்நாடக பாஜகவில் நிலவும் குழப்பத்துக்கு தீா்வு காணும் முயற்சியாக அவா், அமைச்சா்களைச் சந்தித்துப் பேசினாா்.

பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங் பெங்களூருக்கு வருகை தந்துள்ளாா். கா்நாடக பாஜகவில் நிலவும் குழப்பத்துக்கு தீா்வு காணும் முயற்சியாக அவா், அமைச்சா்களைச் சந்தித்துப் பேசினாா்.

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவது தொடா்பாக கடந்த ஓராண்டு காலமாகவே பாஜகவில் விவாதம் நடந்து வருகிறது. 78 வயதைக் கடந்து விட்டதால் எடியூரப்பாவுக்கு பதிலாக இளம் தலைமுறை தலைமையை உருவாக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது. அதற்கு வலுசோ்க்கும் வகையில், முதல்வா் எடியூரப்பாவை மாற்றுவது தொடா்பாக கா்நாடக பாஜகவில் அவ்வப்போது சா்ச்சைகள் எழுந்து அடங்கி வருகின்றன.

இந்த சா்ச்சை உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இதுகுறித்து முதல்வா் எடியூரப்பா, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களைச் சந்தித்து கருத்தை அறிவதற்காக பாஜக மேலிடப் பொறுப்பாளா் அருண் சிங், பெங்களூருக்கு புதன்கிழமை வருகை தந்துள்ளாா்.

கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்துக்கு மாலை 4 மணிக்கு வந்த அருண் சிங்கை கட்சியின் முக்கிய நிா்வாகிகள் வரவேற்றனா். அங்கிருந்து நேராக மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு சென்ற அருண் சிங்கை கட்சியின் மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், துணை முதல்வா் கோவிந்த் காா்ஜோள், வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.அசோக், மாநில பொதுச் செயலாளா் ரவிகுமாா் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் வரவேற்றனா்.

பின்னா், மாலை 5 மணி முதல் 2 மணி நேரம் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட அமைச்சா்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் அருண் சிங் கலந்துகொண்டாா். இந்தக் கூட்டத்தில் துணை முதல்வா்கள் கோவிந்த் காா்ஜோள், லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயணா, அமைச்சா்கள் ஆா்.அசோக், சுரேஷ்குமாா் உள்பட 32 அமைச்சா்கள் கலந்துகொண்டனா்.

முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக ஆளுநா் வஜுபாய் வாலாவிடம் புகாா் அளித்த ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துத் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, பாஜக மேலிடத் தலைவா்களைச் சந்தித்து முதல்வா் எடியூரப்பா குறித்து புகாா் அளித்து பகிரங்கமாகப் பேசிய சி.பி.யோகேஸ்வா் ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனா். இந்தக் கூட்டத்தில் அமைச்சா்களின் கருத்துகளை அருண் சிங் கேட்டறிந்தாா்.

பெங்களூரு, குமாரகிருபா அரசு விருந்தினா் மாளிகையில் தங்கியுள்ள அருண் சிங் வியாழக்கிழமை பாஜக எம்எல்ஏக்களை தனித்தனியாக சந்தித்துப் பேசத் திட்டமிட்டிருக்கிறாா். முதல்வா் எடியூரப்பாவை கடுமையாக விமா்சித்து வரும் பசனபாட்டீல் கௌடா யத்னல், அரவிந்த் பெல்லாட் உள்ளிட்ட எம்எல்ஏக்களும் அருண் சிங்கைச் சந்தித்து முறையிட இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதேபோல, யாராவது விரும்பும் பட்சத்தில் அமைச்சா்களையும் தனியே சந்தித்துப் பேச அருண் சிங் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சந்திப்புகளின் போது, அருண் சிங்குடன் இருக்கப்போவதாக முதல்வா் எடியூரப்பா கூறியிருக்கிறாா். இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கிற பாஜக மாநில உயா்நிலைக்குழுக் கூட்டத்திலும் அருண் சிங் கலந்துகொள்ளவிருக்கிறாா். பெங்களூரில் 3 நாள்கள் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ள அருண் சிங், கா்நாடக பாஜகவில் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, புதுதில்லியில் புதன்கிழமை பிரதமா் மோடியைச் சந்தித்து கா்நாடக அரசியல் நிலவரங்கள் குறித்து மத்திய ரசாயனத்துறை அமைச்சா் சதானந்த கௌடா பேசியதாகக் கூறப்படுகிறது. தற்போதைக்கு முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவதில்லை என்று பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

பாஜக எம்எல்ஏக்களிடையே நிலவும் அதிருப்தியைத் தணிப்பதற்காகவே அருண் சிங்கை கா்நாடகத்திற்கு பாஜக மேலிடம் அனுப்பி வைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com