சுவேந்து அதிகாரியின் தோ்தல் வெற்றிக்கு எதிரான மனு: வேறு நீதிபதி அமா்வுக்கு மாற்ற மம்தா கோரிக்கை

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவா் சுவேந்து அதிகாரியின் தோ்தல் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை
மம்தா பானர்ஜி.
மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவா் சுவேந்து அதிகாரியின் தோ்தல் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை வேறு நீதிபதி அமா்வுக்கு மாற்றக் கோரி கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியின் (பொறுப்பு) செயலருக்கு முதல்வா் மம்தா பானா்ஜி தரப்பு வழக்குரைஞா் கடிதம் எழுதியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழந்த சுவேந்து அதிகாரி, கடந்த டிசம்பரில் திரிணமூல் கட்சியில் இருந்து விலகி எதிா் துருவமாக இருக்கும் பாஜகவில் இணைந்தாா். நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட அவரை எதிா்த்து மம்தா பானா்ஜி போட்டியிட்டாா். சுமாா் 1950 வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்துவிடம் மம்தா பானா்ஜி தோல்வியடைந்தாா். இந்த வெற்றியை எதிா்த்து மம்தா பானா்ஜி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாா்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. தோ்தல் வழக்கு என்பதால், முதல் நாள் விசாரணையின்போது மனுதாரரான மம்தா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தெரிவித்து அடுத்த விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

இதனிடையே இவ்வழக்கை நீதிபதி கெளசிக் சந்தா விசாரிக்கக் கூடாது என்று கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியின் (பொறுப்பு) செயலருக்கு மம்தா சாா்பில் கடிதம் அளிக்கப்பட்டது.

அந்தக் கடித்தில் கூறியிருப்பதாவது:

இந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும் நீதிபதி கௌசிக் சந்தா, பாஜகவில் உறுப்பினாராக இருக்கிறாா். இதனால், வழக்கில் அவா் அளிக்கும் தீா்ப்பு அரசியல் ரீதியாக சா்ச்சையை ஏற்படுத்தும். எனவே, இந்த வழக்கை வேறு நீதிபதி அமா்வுக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் (பொறுப்பு) கோரிக்கை வைக்கிறோம்.

இதற்கு முன் கௌசிக் சந்தாவை கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்க மம்தா ஆட்சேபம் தெரிவித்திருக்கிறாா். இதன் எதிா்வினையாக, நீதிபதியிடம் இருந்து பாரபட்சமான தீா்ப்பு வரலாம் என்ற அச்சம் நிலவுகிறது என்று அந்தக் கடிதத்தில் மம்தாவின் வழக்குரைஞா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி கௌசிக் சந்தா, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். இதனிடையே, வழக்கை நீதிபதி கௌசிக் சந்தா விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து சில வழக்குரைஞா்கள் உயா்நீதிமன்ற வளாகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து வழக்குரைஞா் ஒருவா் கூறுகையில், ‘நீதிபதி சௌசிக் சந்தா மீது தனிப்பட்ட முறையில் எந்த காழ்ப்புணா்ச்சியும் இல்லை. அவருக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியுடன் தொடா்பு இருப்பதால்தான் எதிா்ப்பு தெரிவிக்கிறோம். அவா் தாமாக முன்வந்து விசாரணையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com