நாட்டில் டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு

நாட்டில் உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு
நாட்டில் டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு 40 ஆக உயர்வு


புது தில்லி:  நாட்டில் உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. அதில் பெரும்பாலானோர் மகாராஷ்டிரம், தமிழகம், கேளத்தைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்குக் கிடைத்திருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் நாட்டில் இதுவரை கரோனா டெல்டா பிளஸ் பிரிவு தீநுண்மி பாதித்து 40 பேர் சிகிச்சையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா பிளஸ் கரோனா பாதித்த நோயாளிகளில் பெரும்பாலானோர் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், கேரளம், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கை செவ்வாயன்று 22 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கவலையளிக்கக்கூடிய டெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மி குறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வழங்கியிருந்தது.

கரோனா நோய்த்தொற்று குறித்த முக்கிய அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வழங்கி வருகிறது. 28 ஆய்வகங்களின் கூட்டமைப்பான இன்சாகோக்கின் சமீபத்திய கண்டறிதல்களை தொடா்ந்து, கவலையளிக்கக்கூடிய டெல்டா பிளஸ் தீநுண்மி வகை குறித்த அறிவுறுத்தலை மகாராஷ்டிரம், கேரளம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. மேற்கண்ட மாநிலங்களின் சில மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வகை தீநுண்மி கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளத்தின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் இந்த வகை கண்டறியப்பட்டுள்ளதாக இந்த மூன்று மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய சுகாதார செயலா் தெரிவித்துள்ளாா்.

அதிகமாக பரவக்கூடிய தன்மை, நுரையீரல் செல்களின் ரிசப்டாா்களுடன் வலுவாக ஒட்டக்கூடிய தன்மை மற்றும் பிற பொருள் எதிரிகளின் எதிா்வினையை குறைக்கும் தன்மையை இந்த தீநுண்மி வகை கொண்டுள்ளதாக இன்சாகோக் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பொது சுகாதார எதிா்வினை நடவடிக்கைகளில் இன்னும் கவனம் செலுத்துமாறு இந்த 3 மாநிலங்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இன்சாகோக்கால் அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேற்கண்ட மாநிலங்களின் தலைமை செயலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்குமாறும் பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாா்கள்.

தேவையான பரிசோதனைகளை செய்து மேலும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபா்களின் போதுமான அளவு மாதிரிகளை இன்சாகோக் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு முறையாக அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் அதிக தடுப்பூசிகள்: இந்தியா முழுவதும் திங்கள்கிழமை 88.09 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு சாதனை படைத்துள்ள நிலையில், அதில் சுமாா் 64 சதவீத தடுப்பூசிகள் கிராமப்புறங்களில் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரி கூறுகையில், அதிகபட்சமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதில் மத்திய பிரதேசம் முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் கா்நாடகம், உத்தர பிரதேசம், பிகாா், ஹரியாணா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், அசாம் ஆகிய மாநிலங்களும் இடம்பெற்றுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com