மும்பையில் போலி தடுப்பூசி முகாம்கள்: 2,000 பேருக்கு தண்ணீர் செலுத்தி மோசடி

மும்பையில் உள்ள குடியிருப்புகளில் 2,000 பேருக்கு போலியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் போலி தடுப்பூசி முகாம்
மும்பையில் போலி தடுப்பூசி முகாம்

மும்பையில் உள்ள குடியிருப்புகளில் 2,000 பேருக்கு போலியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை வேகமாக நடத்தி வரும் சூழலில், தனியார் மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில், மும்பை மாநகரில் உள்ள பல குடியுருப்புகளில் தனியார் மருத்துவமனை முகாம் எனக் கூறி கரோனா தடுப்பூசிக்கு பதிலாக தண்ணீர் செலுத்தப்பட்டு ஏமாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மும்பை குடியிருப்பு ஒன்றில் கடந்த மே 30ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த முகாமில் குடியிருப்பை சேர்ந்த 390 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஒருவருக்கு ரூ.1260 வீதம் மொத்தம் ரூ.4,56,000 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 120 பேருக்கு மட்டுமே வெவ்வேறு மருத்துவமனை பெயரில் தடுப்பூசி சான்று வந்துள்ளது.

சான்று கிடைக்காதவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு தொடர்பு கொண்டு கேட்டதில், அந்த மருத்துவமனைகளுக்கு இச்சம்பவம் பற்றி தெரியவில்லை எனக் கூறியுள்ளனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பின்னர் காவல்துறை விசாரணையில், செலுத்தப்பட்டது தடுப்பூசி அல்ல, தண்ணீர் என தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளார் விஷால் தாகூர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது

இந்த விசாரணையில், மும்பை மாநகரில் பல்வேறு மருத்துவமனைகளிடம் இருந்து காலி குப்பிகளை பெற்று அதில் தண்ணீர் நிரப்பி, தடுப்பூசி எனக் கூறி 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த 2,000க்கும் அதிகமானோருக்கு செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுபோன்ற போலி தடுப்பூசி முகாம்களை தடுக்க மகாராஷ்டிர அரசு மற்றும் மும்பை மாநகராட்சி, விரைவில் தடுப்பூசி கொள்கையில் புதிய விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com