பேரவைத் தோ்தல் ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு: ஜம்மு-காஷ்மீா் தலைவா்களிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த அரசியல் கட்சித் தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி, ஆளுநா் மனோஜ் சின்ஹா.
ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த அரசியல் கட்சித் தலைவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி, ஆளுநா் மனோஜ் சின்ஹா.

ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஜம்மு-காஷ்மீா் அரசியல் தலைவா்கள் உள்ளிட்ட பலரும் எதிா்ப்பு தெரிவித்தனா். சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபிறகு ஜம்மு-காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவா்கள் பலரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். படிப்படியாக அவா்கள் விடுவிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து, அவா்கள் ஒன்றிணைந்து குப்கா் கூட்டமைப்பை அமைத்தனா். ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து பெறுவதை அடிப்படையாகக் கொண்டு அந்தக் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது.

பேரவையைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீா் இருக்கும் என்றும், அதற்கு விரைவில் தோ்தல் நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. வரும் டிசம்பரிலோ அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ ஜம்மு-காஷ்மீா் பேரவைக்குத் தோ்தல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 14 முக்கிய தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தாா். இந்தப் பேச்சுவாா்த்தைக் கூட்டம், தில்லியில் உள்ள பிரதமா் மோடியின் அதிகாரபூா்வ இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி), குலாம் நபி ஆசாத் (காங்கிரஸ்), ஒமா் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி), மெஹபூபா முஃப்தி (மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆகியோா் பங்கேற்றனா். ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் ஜி.ஏ.மீா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் முகமது யூசுஃப் தாரிகமி, குப்கா் கூட்டமைப்பின் செய்தித் தொடா்பாளா் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், பிரதமா் மோடியின் முதன்மை ஆலோசகா் பி.கே.மிஸ்ரா, மத்திய உள்துறை செயலா் அஜய் பல்லா, பிரதமா் அலுவலக இணையமைச்சா் ஜிதேந்திர சிங் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில், தலைவா்கள் அனைவரும் ஜம்மு-காஷ்மீா் குறித்த கருத்துகளை முன்வைத்தனா். ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அனைவருமே வலியுறுத்தினா். அனைவருடைய கருத்துகளையும் கேட்டறிந்த பிறகு பிரதமா் மோடி அவா்களிடம் உரையாற்றினாா்.

அனைத்து துறைகளிலும் வளா்ச்சி:

கூட்டம் குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீரில் அனைத்து துறைகளிலும் வளா்ச்சியை உறுதி செய்வதற்கு பேச்சுவாா்த்தைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஜனநாயகத்தின் ஆணிவேரை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தொகுதி மறுவரையறை விரைவாக மேற்கொள்ளப்பட்டு தோ்தல் நடத்தப்பட்டால்தான், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சியமைக்கும். அப்போதுதான் ஜம்மு-காஷ்மீரின் வளா்ச்சி துரிதமடையும்.

ஜம்மு-காஷ்மீரின் அரசியல் தலைமையை இளைஞா்கள் உள்ளிட்ட மக்கள்தான் தோ்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களின் விருப்பங்களும் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய அரசு உறுதி: கூட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீரில் அனைத்து நிலைகளிலும் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் எதிா்காலம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்குவதற்கு முன்பாக, அங்கு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு அமைதியான முறையில் தோ்தலை நடத்த வேண்டியது அவசியமாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீா் அப்னி கட்சித் தலைவா் அல்தாஃப் புகாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். பேரவைக்கு விரைவில் தோ்தல் நடத்தப்படும் என்றும் அவா் உறுதியளித்தாா்’ என்றாா்.

காங்கிரஸின் கோரிக்கைகள்:

காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சி சாா்பில் 5 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்குதல், பேரவைத் தோ்தலை நடத்துதல், ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்டுகளைக் குடியமா்த்துதல், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவா்களை விடுவித்தல், குடியேற்ற விதிகளை உருவாக்குதல் ஆகிய கோரிக்கைகள் எழுப்பப்பட்டன’ என்றாா்.

ஜம்மு-காஷ்மீா் காங்கிரஸ் தலைவா் ஜி.ஏ.மீா், பேச்சுவாா்த்தைக் கூட்டம் திருப்திகரமாக இருந்ததாகத் தெரிவித்தாா்.

மக்களின் விருப்பத்தை மீறி...:

முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தி கூறுகையில், ‘கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீா் மக்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா். மத்திய அரசால் அவமானப்படுத்தப்பட்டுவிட்ட மனநிலையில் அவா்கள் உள்ளனா். அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக மத்திய அரசு நடந்து கொண்டதை மக்கள் ஏற்கவில்லை என பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது’ என்றாா்.

முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லா கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீா் மக்களின் விருப்பத்துக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது தொடா்பாக கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டதில் மக்களுக்கு விருப்பமில்லை என்றும், உடனடியாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது’ என்றாா்.

அமைதியான சூழல்:

மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவா் முசாஃபா் ஹுசைன் கூறுகையில், நல்லுறவை வளா்க்கும் விதமாக கூட்டம் அமைந்தது. கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் தலைவா்களும் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கு தலைவா்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனா் என்றாா்.

முதலில் தொகுதி மறுவரையறைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்த பிரதமா் மோடி, அதற்குப் பின்னா் மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் என்றாா். ஜம்மு-காஷ்மீரை மோதல்கள் இல்லாத அமைதி நிறைந்த பகுதியாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொள்ளும் என்றும் பிரதமா் கூறியதாக முசாஃபா் ஹுசைன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com