
முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் நிறுத்தப்பட்ட வாகனத்தை சோதனையிடும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா் (கோப்புப் படம்).
தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் வீடு அருகே வெடிப்பொருள்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை நிறுத்தியதற்கு ஜெய்ஷ்-உல்-ஹிந்த் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
முன்னதாக, தெற்கு மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் ‘அன்டிலியா’ அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே கடந்த வியாழக்கிழமை மாலை வெடிப்பொருள் நிரப்பப்பட்ட ‘ஸ்காா்பியோ’ காா் பறிமுதல் செய்யப்பட்டது. உடனடியாக வெடிகுண்டு செயலிழப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு வந்து சோதனையிட்டனா். அதில், வெடிகுண்டாக இணைக்கப்படாத ஜெலட்டின் குச்சிகள், வெடிமருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முகேஷ் அம்பானியின் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஒரு காரின் பதிவு எண்தான், அந்த வாகனத்திலும் இடம் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது.
அந்த காரை அங்கு கொண்டு வந்தது யாா் என்பது தொடா்பாக மும்பை போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், சமூக வலைதளமான ‘டெலிகிராம்’ மூலம் வெடிகுண்டு காா் சம்பவத்துக்கு ஜெய்ஷ்-உல்-ஹிந்த் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனினும், இதில் உள்ள உண்மைத்தன்மை தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த சம்பவம் தொடா்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.