கா்நாடக அமைச்சா் வீட்டுக்குச் சென்று கரோனா தடுப்பூசி: சுகாதார அதிகாரிக்கு நோட்டீஸ்


பெங்களூரு: கா்நாடகத்தில் விதிமுறைகளை மீறி மாநில வேளாண் துறை இணையமைச்சா் வீட்டுக்கு சென்று அவருக்கும், அவரின் மனைவிக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது சா்ச்சையாகியுள்ள நிலையில், அதுகுறித்து விளக்கமளிக்குமாறு அந்த மாநில சுகாதார அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் வேளாண் துறை இணையமைச்சராக பதவி வகிப்பவா் பி.சி.பாட்டீல். அங்குள்ள ஹாவேரி மாவட்டத்தில் வசித்து வருகிறாா். அவரும், அவரின் மனைவியும் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். அவா்கள் மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மாறாக விதிமுறைகளை மீறி மருத்துவா்களை தங்கள் வீட்டுக்கே வரவழைத்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக விளக்கம் கோரி தேசிய சுகாதார திட்ட இயக்குநா் (கா்நாடகம்) அருந்ததி சந்திரசேகா், ஹாவேரி மாவட்ட சுகாதார அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

அந்த நோட்டீஸில் அவா் கூறியுள்ளதாவது:

மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, மருத்துவமனைக்கு வரவழைத்துத்தான் பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இதுகுறித்து பல கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமைச்சருக்கு தடுப்பூசி செலுத்தியதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இதுகுறித்து தாங்கள் (சுகாதார அதிகாரி) விளக்கமளிக்க வேண்டும். தாங்கள் தவறிழைத்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

‘அனைவரும் மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதை வீட்டில் இருந்தவாறு செய்தால் தடுப்பூசி செலுத்திய பின்னா் பக்கவிளைவுகள் ஏற்படுவதை சரிவர கண்காணிக்க முடியாமலும், அதற்கு சரியான சிகிச்சையும் வழங்க முடியாத நிலையும் ஏற்படும்’ என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com